தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3600 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், விண்ணமங்கலம் கிராமத்தில் நேற்று கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக 2018-2019-ம் ஆண்டு கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பின் திட்டம் சார்பாக 3600 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பிலான விலையில்லா அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் பணியை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் முகமது காலித், துணை இயக்குநர் ராஜேந்திரன், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

புரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் எடுத்து சென்று வருகிறார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கால்நடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்ற அடிப்படையில் கால்நடை மேம்பாட்டிற்கு அம்மாவின் அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அம்மாவின் அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக கால்நடைகள் உடனடி சிகிச்சை பெறுவதற்கும், உட்கட்டமைப்பு மேம்படுத்துவற்கும், தீவன அபிவிருத்திக்கும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

ஊரக புறக்கடை கோழி திட்டத்தினை கிராமப்புற பெண்களுக்கு குறுகிய காலத்தில் “வாழ்வாதார வழிவகைகளை உருவாக்கிடவும்”, ஆற்றல் மிக்கவர்களாக மாற்றிடவும், தொலைநோக்கு பார்வையில் தொழில் முனைவோராக உருவாக்கிட செய்வதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். இத்திட்டத்தின் மூலமாக கிராமப்புற பெண்களுக்கு “நீடித்த இரட்டை வருமானம்” ஏற்படுத்துவதே அம்மா அவர்களது அரசின் சீாிய நோக்கமாகும்.

இத்திட்டம், சென்னை மாவட்டத்தை தவிர்த்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் சீரிய முறையிலும், சிறப்பாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 200 பயனாளிகள் வீதம் 385 ஒன்றியங்களுக்கும் சேர்த்து 77,000 பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் குறிப்பாக விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், மிகவும் ஏழை, எளிய பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு மாத வயதான 50 “அசீல்” எனப்படும் நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், வல்லூறுகளிடமிருந்தும், நாய், பூனை போன்ற விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்து கொள்ளவும், இரவு நேரங்களில் பாதுகாப்பாக பராமரித்திடவும், ஒவ்வொரு பயனாளிக்கும் இரவு கூண்டுகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஓவ்வொரு பயனாளிக்கும் திட்டம் குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2018-2019-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 200 பயனாளிகள் வீதம் 3600 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான ஊரக புறக்கடை கோழி வளர்ப்பின் விலையில்லா அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படுகிறது. இக்கோழி குஞ்சுகளை நன்கு பராமரித்து வந்தால், கோழிகளின் உற்பத்தி திறன் காலத்திற்குள் சுமார் 2000 முதல் 2500 வரை முட்டைகள் பெற இயலும்.

இவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.16,000 முதல் ரூ.20,000 வரையிலான வருவாய் கிடைக்கும். மேலும், சேவல்கள் மற்றும் வயது முதிர்ந்த கோழிகளை விற்பனை செய்வதன் மூலமும்; கூடுதலாக ரூ.7000 முதல் ரூ.10,000 வரையில் இத்திட்டத்தின் மூலம் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக கோழிகுஞ்சுகளை வளர்ப்பதன் மூலம் நீடித்த நிலையினையும், “இரட்டை வருவாயினையும்” கண்டிப்பாக அடைய முடியும்.

அம்மாவின் அரசு பள்ளிக் கல்வித்துறை மூலமாக ரூ.28 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மடிகணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, நோட்டுப்புத்தகம், வண்ணப்பென்சில், பேருந்து பயண அட்டை, மதிய உணவு உட்பட 16 வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமூகநலத் துறை மூலமாக ஏழை, எளிய பெண்களின் திருமணம் தடைபடக் கூடாது என்பதற்காக திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம், பட்டம் மற்றும் பட்டயம் படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலமாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசையுடன் சமுததாய வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட உட்பட எண்ணற்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், குறிப்பாக பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் புரட்சித் தலைவி அம்மாவின் அரசுக்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.

இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக கோழிகளுக்கு ஏற்படும் கோழி காய்ச்சல் நோய் தடுப்பதற்கான இலவச தடுப்பூசி முகாமினை விண்ணமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்த அமைச்சர் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளும் வழங்கினார்.