தற்போதைய செய்திகள்

திருவள்ளூரில் 1072 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி – அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்…

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் 550 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், 250 பயனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனங்கள், 200 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டு கோழி குஞ்சுகள், 110 பயனாளிகளுக்கு விலையில்லா வெள்ளாடு மற்றும் மூன்று மாற்று திறனாளிகளுக்கு ரூ.25000 வங்கிகடன் ஆகியவற்றை தமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேணுகோபால், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான சிறுணியம் பி.பலராமன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் ஆகியோர் வழங்கினர். மொத்தம் 1072 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் க.பாண்டியராஜன் பேசியதாவது :-

முதலமைச்சர் தலைமையிலான கழக அரசு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக சமூகநலத் துறை சார்பாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் பூவிருந்தமல்லி, திருவள்ளூர், பூண்டி மற்றும் திருவாலங்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 509 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தாலிக்கு தங்கம்,

ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பில் திருமண உதவித்தொகை உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள், கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக ஊரக புறக்கடை நாட்டுக்கோழி வளர்க்கும் திட்டத்தில் 200 பயனாளிகளுக்கு தலா 50 நாட்டுக்கோழி குஞ்சுகள், 110 பயனாளிகளுக்கு ரூ.12 ஆயிரத்து 750 வீதம் மொத்தம் ரூபாய் 14 லட்சத்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் புரிய வங்கிக்கடன் மானியமாக மூன்று பயனாளிகளுக்கு 25 ஆயிரம் வீதம் மொத்தம் 75 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் க.பாண்டியராஜன் பேசினார்.