திருவாரூர்

திருவாருர் நகராட்சியை தரம் உயர்த்திட நடவடிக்கை – கழக வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம் வாக்குறுதி…

திருவாருர்:-

திருவாரூர் நகராட்சியின் தரத்தை உயர்த்திட நடவடிக்கை எடுப்பேன் என்று திருவாருர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம் பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம் திருவாரூர் நகரத்திற்குட்பட்ட 30 வார்டுகளிலும் மாவட்ட கழக செயலாளரும் அமைச்சருமான ஆர்.காமராஜருடன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர் மத்தியில் கழக வேட்பாளர் ஆர்.ஜீவானந்தம் பேசுகையில், அம்மா அவர்களின் அருளாசியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கழக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் 34 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள், பாலங்கள், குடிநீர் மற்றும் வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திருவாரூர் நகரில் உள்ள 30 வார்டுகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ. 5 கோடியே 40 லட்சம் மதிப்பில் தானியங்கி குடிநீர் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் நகராட்சி சுற்றுப்புறங்களில் புதிய குடியிருப்புகள் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களின் கூடுதல் வசதிக்காகவும், காலவிரயத்தை தவிர்க்கும் வகையிலும் புறநகர் பகுதிகளை திருவாரூர் நகராட்சியுடன் இணைத்து நகராட்சியின் தரத்தை உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றியின் சின்னமான இரட்டைஇலை சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன் என்றார்.

இந்த வாக்குசேகரிப்பின் போது கழக வேட்பாளருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்தப் பிரச்சாரத்தில் திருவாரூர் நகர கழக செயலாளர் மூர்த்தி, கழக நிர்வாகிகள் கூரியர் மதிவாணன், கருத்திருமன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.