தற்போதைய செய்திகள்

திருவாரூரில் பயனாளிகளுக்கு ரூ.1.98 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…

திருவாரூர்:-

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 700 உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட ரூ.1 கோடியே 98 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 700 உழைக்கும் மகளிருக்கு ரூ.1 கோடியே 75 லட்சம் மானியத்துடன் கூடிய அம்மா இருசக்கர வாகனம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 72 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23 லட்சம் 12 ஆயிரம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், நவீன காதொலி கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் த.ஆனந்த் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களால் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் இன்றைக்கும் உயிரோட்டமுள்ள மக்கள் பாராட்டுகிற திட்டங்களாக அமைந்துள்ளது. ஏழை, எளிய சாதாரண மக்களின் பசிபோக்கும் விதத்தில் விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியவர் அம்மா. பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற நோக்கில் அம்மா அவர்களின் மக்கள் நலத்திட்டங்கள் வெகுவாக பெண்களை மையமாக கொண்டு தீட்டப்பட்டவை. அம்மா அரசு மக்களின் தேவைகளை நிறைவேற்றுகிற அரசாக திகழ்ந்து வருகிறது.

உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டமானது மகளிரை குடும்ப தலைவராக கொண்ட குடும்பங்களை சார்ந்த மகளிர், ஆதரவற்ற விதவை, விதவை, கணவரால் கைவிடப்பட்ட மகளிர், தாழ்த்தப்பட்டோர், திருநங்கைகள், 35 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்திற்கு 2017-18-ஆம் ஆண்டிற்கு 1825 உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மூன்று கட்டங்களாக 1125 உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. இன்றையதினம் நான்காம் கட்டமாக 700 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பு மானியத்துடன்கூடிய அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 72 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம், நவீன காதொலி கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்களும் ஆக மொத்தம் 772 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 98 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்களை பெண்கள் பயன்படுத்தி கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தெய்வநாயகி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் ராஜ்மோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உமாமகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் முருகதாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் மணிகண்டன், கமலாம்பிகா கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஆர்.டி.மூர்;த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.