தற்போதைய செய்திகள்

திரைத்துறையினர் ஒத்துழைத்தால் தான் திருட்டு வி.சி.டி.யை தடுக்க முடியும் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேட்டி

கோவில்பட்டி

திரைத்துறையினர் ஒருங்கிணைந்து ஒத்துழைத்தால் தான் திருட்டு வி.சி.டி.யைத் தடுக்க முடியும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே, செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறியதாவது:-

திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, கழக அரசு டிக்கெட் விலையை நிர்ணயித்தது, அதன்பிறகு தான் திரையரங்குகள் மூடப்படும் நிலை ஏற்படவில்லை. ஒரு திரையரங்கை 2 அல்லது 3 திரையரங்குகளாக மாற்ற வேண்டும். பொதுப்பணித் துறை மூலம் புதுப்பிக்க வேண்டிய கட்டட உறுதித்தன்மை சான்றை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையாக மாற்ற வேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து அனுமதி அளித்துள்ளது. அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

30 சதவீதமாக இருந்த கேளிக்கை வரி 8 சதவீதமாக குறைத்து வசூலிக்கப்படுகிறது. இதையும் குறைக்க வேண்டும் என கோவை மண்டல திரையரங்கு உரிமையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். திரையரங்கு உரிமையாளர்களுக்கு பல்வேறு சங்கங்கள் உள்ளன. அனைவரும் ஒன்றிணைந்து இக்கோரிக்கையை வைத்தால் சுமூக தீர்வு எடுக்கப்படும்.

திருட்டு வி.சி.டி.யை தடுக்க கழக அரசுதான் தனிச்சட்டம் கொண்டு வந்தது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இணைந்து ஒத்துழைத்தால் திருட்டு வி.சி.டி., இணையதளத்தில் புதுப்படங்கள் வெளியாவது உள்பட அனைத்தையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

குடியுரிமைச் சட்டம் தொடர்பாக திமுக கூட்டணி மக்களவை உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தலாம். மக்கள் பிரச்னையைத் தீர்க்கத் தான் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் மக்கள் உணர்வுகளைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட முயல்வது கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.