இந்தியா மற்றவை

திறன் எல்லைகளை விரிவுபடுத்துங்கள் – ராணுவ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

பெங்களூரு

ராணுவ விஞ்ஞானிகள் திறன் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் மாலை பெங்களூருவில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு வந்தார். அங்கு புதிதாக அமைக்கப்பட்டிருந்த இளம் விஞ்ஞானிகள் ஆய்வு கூடத்தை மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து பேசியதாவது:-

உங்களின் திறன் பரந்து விரிந்த அளவுக்கு உள்ளது. நீங்கள் பல்வேறு விஷயங்களை சாதிக்க முடியும். உங்களின் திறன் எல்லைகளை விரிவுபடுத்துங்கள். உங்களின் செயல்பாட்டு அளவுகோலை மாற்றுங்கள். இறக்கைகளை விரித்து பறந்து செல்லுங்கள். பல்வேறு வாய்ப்புகள் உங்களுக்கு காத்திருக்கின்றன. நான் உங்களுடன் இருக்கிறேன்.

விஞ்ஞானிகள் மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பவர்களுடன் அரசு உள்ளது. விமானப்படை, கடற்படையுடன் சைபர் மற்றும் விண்வெளித்துறை வரையறுக்கப்பட்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இத்துடன் வரும் நாட்களில் ராணுவத்தில் திறன் வாய்ந்த எந்திரங்கள் மிக முக்கிய பங்காற்றும்.இத்தகைய சூழ்நிலையில் இந்தியா பின்னடைவை சந்திக்காது. மக்கள், எல்லைகள், நாட்டின் நலனை பாதுகாக்க, எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையை கண்டுபிடித்தலில் முதலீடு செய்வது அவசியம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்த விழாவில் ராணுவ அதிகாரிகள், விஞ்ஞானிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.இளம் விஞ்ஞானிகள் ஆய்வு கூடங்கள் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன.தற்போது பெங்களூருவில் இந்த கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இந்த ஆய்வு கூடங்களில் போர்த்திறனுக்கான மிக முக்கியமான நவீன தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. 35 வயதுக்கு உட்பட்ட இளம் விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இந்த ஆய்வு கூடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.