தற்போதைய செய்திகள்

தில்லுமுல்லு செய்தாலும் தி.மு.க., அ.ம.மு.க. வெற்றிபெற முடியாது – அமைச்சர் டி.ஜெயக்குமார் முழக்கம்…

மதுரை

எத்தனை தில்லுமுல்லு செய்தாலும் தி.மு.க., அ.ம.மு.க. வெற்றி பெற முடியாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

திருப்பரங்குன்றம் தொகுதி கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து விளாச்சேரி பகுதியில் கழக அமைப்பு செயலாளரும், மீன்வளத்துறை அமைச்சருமான டி.ஜெயக்குமார் பிரச்சாரம் செய்தார், இந்த பிரச்சாரத்தில் வடசென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் நா.பாலகங்கா, மற்றும் நிர்வாகிகள் மகிழன்பன், வீரமணி, அரசு, கன்னியப்பன், குமாரி நாராயணன், வேளாங்கண்ணி, நிழல்கொடி மற்றும் மதுரை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரச்சாரத்தின் போது அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:-

திருப்பரங்குன்றம் என்றைக்கும் கழகத்தின் கோட்டையாகும். 8 முறை கழகமும், 1 முறை கழக கூட்டணியும் வெற்றி பெற்றுள்ளது. தற்போது 10 வது முறையாக நிச்சயம் இப்பகுதி மக்கள் ஒரு எழுச்சிமிகு வெற்றியைத் தந்து 50,000 வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார். தற்போது கழகத்தின் வெற்றியை தடுக்க டி.டி.வி.தினகரனும், ஸ்டாலினும் பணபட்டுவாடா செய்து வருகின்றனர். இந்த பணம் திமுக 2ஜியில் கொள்ளையடித்ததும், தினகரன் அம்மாவுக்கு தெரியாமல் கொள்ளையடித்த பணமும் ஆகும். இந்த தேர்தலில் மிகப்பெரிய சாதனை படைத்திடும் வண்ணம் திருப்பரங்குன்றம் தேர்தல் முடிவு இருக்கும்.

திமுகவும். அமமுகவும் எத்தனை தில்லுமுல்லு செய்தாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. ஏனென்றால் அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் அனைத்து மக்களின் கைகளில் சேர்க்கப்பட்டுள்ளது .திமுகவும், தினகரனும் தாங்கள் வெற்றி பெறுவோம் என்று பகல் கனவு கூட காண முடியாது.தற்போது கமலஹாசன் ஒரு மதத்தை குறிவைத்து சொல்வது ஏற்க முடியாத கருத்தாகும். அதிலும் ஒரு மதத்தின் மீது கமல்ஹாசன் தாக்கி பேசும் கருத்துக்கு அவர் மீது வழக்கு தொடரவேண்டும் என்பது ஏற்புடையாதாகும். தற்போது தேர்தல் காலம் என்பதால் அம்மாவின் அரசு எதையும் செய்ய முடியாது. ஆனால் தேர்தல் ஆணையம் தான் இது குறித்து வழக்கு தொடர்பான முடிவு எடுக்கும்.

என்றைக்குமே எம்மதமும், சம்மதம் என்ற நோக்கத்துடன், நாங்கள் மக்கள் பணி ஆற்றி வருகிறோம். தமிழகத்தில் தான் அனைத்து ஜாதி, மத, உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்பட்டு வருகிறது. பாபர் மசூதியை இடித்த போது இந்தியா முழுவதும் கலவரம் ஏற்பட்டது. ஆனால் தமிழகத்தில் அம்மா முதலமைச்சராக இருந்த போது எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை. ஜாதி, மதங்களை தூண்டிவிட்டு அதன் மூலம் குளிர்காய நினைக்கும் சுயநல கும்பலுக்கு மக்கள் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

தற்போது மூன்றாவது அணி என்ற பெயரில் திமுக ஒரு சந்தர்ப்பவாத அரசியல் செய்து வருகிறது. ஸ்டாலின் பச்சோந்தி போல் செயல்பட்டு கொண்டு வருகிறார். இது போன்று தங்களை மாற்றிக்கொள்வதில் திமுக வினர் கில்லாடிகள். சந்திரசேகரராவ் ஸ்டாலினை 1 மணிநேரம் சந்திதது விட்டு சென்றார். பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் 23-ம் தேதிக்கு பிற்கு தான் விபரம் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். ஸ்டாலினுக்கே இப்போது நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டது. இதை காங்கிரசும் புரிந்து கொள்ள வேண்டும், திமுக கூட்டணி என்றைக்கும் தேறாது. ஓட்டை கப்பலுக்கு 9 மாலுமிகள் போல் செல்லலாகாசான தி.மு.க.வுக்கு 9 கூட்டணிகள் என்பதைப்போல் உள்ளது. வருகின்ற 23ம் தேதி மட்டுமல்லாது 2021-ல் மே 23-ல் கூட திமுக தேறாது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசினார்.