தற்போதைய செய்திகள்

தி.மு.க.,அ.ம.மு.க.வுக்கு தோல்வி உறுதி -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு…

மதுரை:-

கருத்துக்கணிப்புகள் உண்மையாகி விடாது. தி.மு.க., அ.ம.மு.க.வுக்கு தோல்வி உறுதி என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் மதுரை நாடாளுமன்ற வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ராஜ் சத்யன், சட்ட மன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

மக்கள் மனதை யாராலும் அறிய முடியாது. பல்வேறு கருத்துக் கணிப்புகள், கருத்து சித்தரிப்புகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. நாம் குடிநீர் திட்டம், சாலைபணி திட்டம், கூட்டு குடிநீர் திட்டம் இப்படி மதுரைக்கு அதிகமான மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். எனவே நமது வேட்பாளர்கள் வெற்றி உறுதி. தோல்வி பயத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு ஜெராக்ஸ் மெஷின் கூட கொண்டு செல்ல திமுகவினர் எதிர்க்கிறார்கள். இந்த தேர்தலில் திமுகவுக்கும் அமமுகவுக்கும் தோல்வி உறுதி.

கழக முகவர்கள் அனைவரும் காலை 4 மணிக்கு எழுந்து, 6 மணிக்குள் சாப்பிட்டு, 6 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று விட வேண்டும். முன் கூட்டி சென்றால் தான் முன்னால் உள்ள இருக்கைகளை பிடிக்க முடியும். வாக்கு எந்திரத்தில் சீல் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டும். அதுபோல் வாக்கு எண்ணும்போது விழிப்புணர்வுடன் நீங்கள் இருக்க வேண்டும். இந்த தடவை வாக்கு எண்ணிக்கை தாமதமாகலாம். ஏனென்றால் இந்த தடவை. ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 இயந்திரங்கள், அதாவது நாடாளுமன்ற தொகுதிக்கு 30 ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் எண்ணி சரிபார்க்க வேண்டும். இது இந்தியாவில் முதன் முதலாக நடைபெறும் தேர்தல் நடைமுறை.

ராஜ தந்திரம், மதி நுட்பத்தோடு மிகுந்த விழிப்புணர்வோடு வாக்கு எண்ணிக்கை முகவர்கள் செயல்பட வேண்டும். தேர்தல் அதிகாரிகளிடம் அதிகார மனப்போக்கோடு நடந்து கொள்ளாமல் சுமூகமாக நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது பக்கம் இயந்திரங்களை நன்கு தூக்கி காண்பிப்பார்கள். நல்ல பல மக்கள் நலத் திட்டங்களை செய்துள்ளதால் மத்தியிலும், மாநிலத்திலும் வெற்றி உறுதி. கருத்துக் கணிப்புகள் எல்லாம் உண்மை ஆகாது.

சாத்தூரில் நான் நின்ற போது தோற்பேன் என்றார்கள். ஆனால் நான் ஜெயித்தேன். எடப்பாடியில் எடப்பாடி பழனிசாமி தோற்பார் என்றது கருத்துக் கணிப்பு. ஆனால் அவர் ஜெயித்தார். ஆதலால் கருத்துக் கணிப்புகள் உண்மையாகாது. எனவே வெற்றிச் செய்தியோடு வாருங்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்.