தற்போதைய செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு நன்மை செய்தது உண்டா? மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி…

மதுரை:-

தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு நன்மை செய்தது உண்டா? என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை திருமங்கலம் தொகுதியில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

அம்மாவின் மறைவிற்குப்பின் கழக அரசை எதிர்க்கட்சிகள் அகற்ற நினைத்தபோது வானத்து தேவதையாக இருந்து காத்தார். அவரது வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் இரண்டு ஆண்டுகளில் சரித்திரம் போற்றும் சாதனை திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர்.

இந்தியாவில் அதிக மனுக்கள் பெற்ற முதலமைச்சர் யார், மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்த முதலமைச்சர் யார் என்று பட்டியலிட்டு பார்த்தால் முதலிடத்தில் நமது முதலமைச்சர் இருப்பார். இதை நான் சொல்லவில்லை. அகில இந்திய அளவில் உள்ள ஊடகங்கள் கூறி வருகின்றன.

இந்த இரண்டு ஆண்டுகளில் அம்மாவின் அரசை முடக்கும் வண்ணம் எதிர்க்கட்சிகள் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தின. அதையெல்லாம் தகர்த்தெறிந்து இதுவரை 12,000 கோப்புகளில் கையெழுத்திட்டு, மக்களின் திட்டங்களை உடனுக்குடன் செயல்படுத்தி உள்ளார். கரிகாற் சோழன் காலத்தில் தான் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டது, தற்போது முதலமைச்சர் இந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.428 கோடி மதிப்பில் தமிழகத்தில் உள்ள ஏரி, கண்மாய்களை தூர்வாரி நீர் ஆதாரத்தை பெருக்கியுள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அம்மா பெற்றுத்தந்த தீர்ப்பை தொடர்ந்து கட்டி காத்து வருகிறார். அது மட்டுமல்லாது காவேரி நீர் பிரச்சினையில் மாபெரும் சட்டப் போராட்டம் நடத்தி காவேரி நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துள்ளார்.

இதற்கெல்லாம் மேலே அம்மாவின் வழியில் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2 கோடி குடும்பங்களுக்கு ரூ.1000 வழங்கியுள்ளார். மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். தென் மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையான எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரை தோப்பூரில் அமைத்து கொடுத்துள்ளார். கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.12 ஆயிரமாக இருந்ததை ரூ.18,000 மாக உயர்த்தி கொடுத்துள்ளார் மேலும் அம்மாவின் திட்டமான பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து வழங்கி வருகிறார். நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் மக்களுக்கு திட்டங்களை அழித்து வரியில்லாத பட்ஜெட்டாக உங்களுக்கு வழங்கி வருகிறார்.

கடந்த 2 ஆண்டுகளில் முதலமைச்சர் செய்த சாதனை திட்டங்களைப்போல் 5 முறை ஆண்ட தி.மு.க. ஆட்சியில் இது போன்று ஒரு திட்டத்தையாவது செய்தது உண்டா என்பதை ஸ்டாலின் விளக்கி கூற வேண்டும். தி.மு.க. ஆட்சியில் தான் சர்க்காரியா ஊழல், இந்திய இறையாண்மையை காக்க தவறியது என்ற குற்றத்திற்காக இரண்டு முறை ஆட்சி கலைக்கப்பட்டது. அது மட்டுமல்லாது, சாதி கலவரம், மத கலவரம், ரவுடிகள் தொல்லை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நில அபகரிப்பு இப்படித்தான் தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றது. அது மக்களுக்கும் தெரியும், ஸ்டாலினுக்கும் தெரியும். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பாடம் புகட்டி கழக கூட்டணிக்கு இமாலய வெற்றியை தேடித் தர அனைவரும் கண் துஞ்சாது பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர் அன்பழகன், ராமசாமி, மகாலிங்கம், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, பேரூர் கழக செயலாளர் நெடுமாறன், பாலசுப்பிரமணி, முன்னாள் சேர்மன் ஆண்டிச்சாமி, முன்னாள் பாசறை செயலாளர் காசிமாயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.