சிறப்பு செய்திகள்

தி.மு.க. உறுப்பினரின் பேச்சுக்கு முதல்வர்- துணை முதல்வர் பதிலடி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்…

சென்னை:-

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குவது சரியா? தவறா? என்று சட்டசபையில் தி.மு.க.வுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சரமாரி கேள்வி கேட்டார்கள்.

எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே சிண்டு முடிக்க நினைத்த தி.மு.க. உறுப்பினர் பொன்முடி பின்னர், 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதில் ஆட்சேபணை இல்லை என்று ஒப்புக் கொண்டார். அம்மாவின் அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் அதனை நிறைவேற்றி தரும் என்று முதலமைச்சர் கூறினார்.

சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதம் 2 ம் நாளாக நடந்தது.  விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் பொன்முடி பேசினார்.அவர் பேசும்போது, சபையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 60 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதற்கு 2 நாளுக்கு முன்பு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார். அது நிழல் பட்ஜெட், முதலமைச்சர் சொன்னது நிஜ பட்ஜெட் என்று கூறினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: நாங்கள் நிஜபட்ஜெட் தான் தாக்கல் செய்திருக்கிறோம். தொடர்ந்து நிஜ பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறோம். எனவே தான் 32 ஆண்டுகளுக்குப் பின் ஆளும் கட்சி தொடர்ந்து (அண்ணா தி.மு.க.) மீண்டும் ஆட்சிக்கு வந்த வரலாறு படைத்திருக்கிறோம். எங்களுக்கு மக்கள் அங்கீகாரம் அளித்து இந்த பக்கம் (ஆளும் கட்சி வரிசை) வைத்திருக்கிறார்கள். நீங்கள் (தி.மு.க.) அந்த பக்கம் (எதிர்க்கட்சி வரிசை) இருக்கிறீர்கள்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: 60 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது சரியா? இல்லையா? இது ஏழை மக்களுக்கான திட்டம். உழைக்கும் உழைப்பாளர்களுக்கு, தொழிலாளர்களுக்கு கொடுக்கும் நிதி இது. இது அறிவித்தது தவறு என்று சொல்கிறீர்களா?

பொன்முடி (தி.மு.க.): 2 நாட்களுக்கு முன்பு தான் துணை முதலமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் இந்த திட்டத்தை சொல்லாமல் நேற்று நீங்கள் தனியாக இதனை அறிவித்திருக்கிறீர்களே?

ஓ.பன்னீர்செல்வம்: 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் இந்த திட்டம் வேண்டும் என்கிறீர்களா? வேண்டாம் என்கிறீர்களா?

பொன்முடி: இந்த திட்டத்துக்கு அப்ஜெக்ஷன் (ஆட்பேசபணை) இல்லை. சொன்ன முறை தான் சரி அல்ல.

ஓ.பன்னீர்செல்வம்: விதி 110 ன் கீழ் முதலமைச்சர் இந்த திட்டத்தை அறிவித்தார். எந்த நிலையிலும் எப்போது வேண்டுமானாலும் சொல்ல முதலமைச்சருக்கு உரிமை உண்டு.

பொன்முடி: கரும்பு உற்பத்தியை 1000 டன்னாக உயர்த்துவோம் என்கிறீர்கள். ஆனால் 250 டன்னாக குறைந்திருக்கிறதே?
அமைச்சர் பி.தங்கமணி: கடும் வறட்சி காரணமாக உற்பத்தி குறைந்திருக்கிறது. எனவே தான் முதலமைச்சர் நேற்று வறட்சியால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். மழை பெய்திருந்தால் உற்பத்தி அதிகரித்திருக்கும், நீங்கள் பட்ஜெட்டில் சொன்னதை நிறைவேற்றி னீர்களா? வறட்சி காரணமாக உற்பத்தி குறைந்திருக்கிறது.

அமைச்சர் காமராஜ்: நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு 1840 ரூபாய் என அறிவித்திருக்கிறோம். மாநில அரசு ஊக்கத்தொகையாக 50 ரூபாய் தருகிறது. கடந்த 7 ஆண்டுகளில் ஊக்கத்தொகையாக மட்டும் மொத்தம் 631 கோடி ரூபாய் இந்த அரசு வழங்கி இருக்கிறது.

பொன்முடி: 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற சவுக்கு மரம் இப்போது 3 ஆயிரம் ரூபாய்க்கு தான் விற்கப்படுகிறது. காகித ஆலைகள் பேப்பர் தயாரிக்க கூழ்களை வெளிநாட்டில் இருந்து வாங்குகிறார்கள்.

அமைச்சர் எம்.சி.சம்பத்: கஜா புயலில் ஏராளமான சவுக்கு மரங்கள் விழுந்தன. அப்போது அரசு 5450 ரூபாய் விலையில் அந்த மரங்களை வாங்கினோம். மொத்தம் 1 லட்சம் டன் சவுக்கு மரம் கொள்முதல் செய்யப்பட்டது.

பொன்முடி: மற்ற இடங்களில் 3000 ரூபாய்க்கு சவுக்கு மரம் விற்கப்படுகிறதே?

அமைச்சர் ஓ.எஸ்.மணியன்: இப்போது சவுக்கு மரத்துக்கு பதிலாக யுகலிப்டஸ் மரம் வளர்க்கிறார்கள். சவுக்கு மரம் வளர்க்க தண்ணர் வேண்டும். யுகலிப்டஸ் மரம் வளர்க்க தண்ணீர் தேவை இல்லை. சவுக்கு மரத்தை வெட்டினால் பின்னர் மீண்டும் வேறு மரம் தான் வைத்து வளர்க்க வேண்டும். ஆனால் யுகலிப்டஸ் மரத்தை தொடர்ந்து 3 முறை வெட்டலாம். தமிழ்நாட்டில் வீடுகளில் இப்போது எரிவாயு பயன்படுத்துவதால் விறகு பயன்படுத்துவது குறைந்து விட்டது. கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட சவுக்கு மரங்களுக்கு ஹெக்டேருக்கு 18 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை முதலமைச்சர் வழங்கினார்.

ஸ்டாலின்: 7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி என அறிவித்தது உண்மை. கணக்கெடுக்க போகும்போது கூடுதல், குறைவு இருக்கலாம். கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? இல்லையா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: 7 ஆயிரம் கோடி என்று அறிவித்தீர்கள். ஆனால் அறிவித்தை முழுவதும் கொடுக்கவில்லை. குறைவாகத்தான் கொடுத்தீர்கள். விவசாயிகளுக்கு அரசு ஏதும் செய்யவில்லை என்றும் உறுப்பினர் பொன்முடி கூறினார். வறட்சி வந்தபோது வறட்சி நிவாரணம் கொடுத்த ஒரே அரசு அம்மாவின் அரசு. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு மூலம் 3527 கோடி ரூபாய் பெற்று தந்தோம். விவசாயிகளுக்கு தொடர்ந்து நன்மைகளை செய்து வருவது அம்மாவின் அரசு.

அமைச்சர் செல்லூர் ராஜூ: உங்கள் (தி.மு.க.) ஆட்சியில் ஒரே குடும்பத்துக்கு 89 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்தீர்கள், விவசாயிகளை கைதூக்கி விட அம்மா அனைத்தும் செய்திருக்கிறார். இதற்காக விவசாயிகளே பாராட்டி இருக்கிறார்கள்.

பொன்முடி (தி.மு.க.): சிறு குறு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வீர்களா?

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: வறட்சி காரணமாக விவசாயிகள் பாதித்த போது காப்பீட்டு திட்டம் மூலம் நிவாரணம் பெற்று தந்திருக்கிறோம். 3 ஆயிரத்து 527 கோடி ரூபாய் பயிர் இழப்பீடு காப்பீட்டு தொகை பெற்று தந்திருக்கிறோம். 12 லட்சத்து 6 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றிருக்கிறார்கள்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.