தற்போதைய செய்திகள்

தி.மு.க. எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திட்டவட்டம்…

கோவை

மக்களுக்கு எந்தவொரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தாத தி.மு.க. எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

சூலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டசின்னியம்பாளையம், மயிலம்பட்டி, முத்துகவுண்டன்புதூர் ஊராட்சிகளுக்குட்பட்ட
பகுதிகளில் கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கழக வேட்பாளர் வி.பி. கந்தசாமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த பிரச்சாரத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

சூலூர் தொகுதிக்குட்பட்ட முத்துகவுண்டன்புதூர் ஊராட்சியில் ரூ .10 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த ஊராட்சிகளுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் தேவையோ அத்தனை திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சூலூர் தொகுதியில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலைகள், தீயணைப்பு நிலையம், பேருந்து நிலையம், வட்டார துணை போக்குவரத்து அலுவலகம் மேம்பாலங்கள் போன்ற பணிகளில் பல நிறைவடைந்தும், சில பணிகள் நடைபெற்றும் வருகிறது.

கோவை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. நடுத்தர மக்களும் ஏழைகளும் பயன்படுத்தும் அரசு மருத்துவமனை தற்பொழுது தனியார் மருத்துவமனைக்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் இருதய அறுவை சிகிச்சைக்கும், சிறுநீரக அறுவை சிகிச்சைக்கும், பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையை நோக்கி செல்ல வேண்டி இருந்த சூழ்நிலை மாறி, தற்சமயம் கோவை அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய தொழில்நுட்பம் கொண்ட பல்வேறு உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் தொண்டாமுத்தூர் பொள்ளாச்சி பல்லடம் ஆகிய இடங்களில் புதியதாக 4 அரசு கலைக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளது.கிராம சாலைகள் மேம்படுத்தப்பட்டு, அனைத்து சாலைகளும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நமது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தான் ஒரு விவசாயி என்பதனால், 70 ஆண்டுகால விவசாயிகளின் கோரிக்கையான அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியின் போது தமிழகத்திற்கும், கோவை மாவட்டத்திற்கு எந்த ஒரு திட்டங்களையும் தரவில்லை.

ஆகவே தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் கொண்டு வந்த திட்டங்களை எடுத்துக் கூற முடியாமல் கழக அரசின் மீதும், முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் அவதூறுகளையும், பொய் பிரச்சாரங்களையும் பரப்புவதை மட்டுமே வாடிக்கையாக கொண்டுள்ளார். பல்வேறு பொய் புகார்களை கூறி குறுக்கு வழியில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க நினைக்கும் எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் வாக்காளப் பெருமக்கள் நீங்கள் பாடம் புகட்டுங்கள்.

பதவி முக்கியம், குடும்ப நலனே முக்கியம் என்று பல்வேறு பதவிகளை பெற்றுக்கொண்டு தமிழகத்திற்கு முக்கிய பிரச்சினைகளில் துரோகம் செய்த திமுக இன்று குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக கூட்டணி அமைத்து செயல்படுகிறது இப்போது மட்டும் அல்ல எக்காலத்திலும் திமுக ஆட்சியை பிடிக்க முடியாது மு.க.ஸ்டாலினும் முதல்வராக முடியாது. ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு எந்த ஒரு நல்ல திட்டங்களையும் செயல்படுத்த வில்லை.

ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் கழக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்காக பணியாற்ற கூடியவரும், இத்தொகுதியை சேர்ந்தவருமான கழக வேட்பாளர் வி.பி. கந்தசாமிக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களியுங்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்காளர்களை சந்தித்து பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்யுங்கள்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.