சிறப்பு செய்திகள்

தி.மு.க. எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரவே முடியாது – துணை முதலமைச்சர் கடும் தாக்கு…

தருமபுரி:-

பிரியாணிக்காக வன்முறையில் ஈடுபட்டவர்கள் நாட்டை எப்படி ஆள்வார்கள் என்றும், தி.மு.க. எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரவே முடியாது என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்  தர்மபுரி மாவட்டம் உடைசல்பட்டி கூட்டுரோடு அருகில், தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க வேட்பாளர் டாக்டர்.அன்புமணி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் எ.கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்த போது ஆற்றிய உரை வருமாறு:-

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி மற்றும் அரூர் சட்டமன்றத் தொகுதி மக்களின் ஜீவாதார பிரச்சினையை தீர்க்கும் கட்சி எது என்று முடிவு செய்து வாக்களிக்குமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இத்தொகுதியில் இடைத்தேர்தல் ஏன்? என்று தெரியுமா, ஒரு தனிப்பட்ட குடும்பக் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் ஏற்பட்ட விளைவுதான் இது என்பது அனைவருக்கும் தெரியும்.

இப்பகுதியில் 2007-2011 வரை திமுக ஆட்சியில் தொடர்ந்து இருந்துவந்தபோது ஏற்பட்ட மின்சார தட்டுப்பாட்டினை அவர்களால் தடுக்க முடிந்ததா? ஆனால் புரட்சிமஙதலைவி அம்மா ஆட்சி பொறுப்பேற்றவுடன் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக மின்சாரம் துண்டிப்பே இல்லாத பகுதியாக மாற்றினார் என்பதை நினைவு கூர்ந்திட கடமைப்பட்டிருக்கிறேன்.

இத்தொகுதியில் மக்களின் முக்கிய பிரச்சினைகளான குடிநீர் பிரச்சனை, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பின்தங்கியுள்ள இம்மாவட்டத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா அவர்களின் ஆட்சியின் குறிக்கோள்.

புரட்சித்தலைவி அம்மா வழியில் நடக்கும் எங்கள் ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற்றுத் தந்துள்ளோம். எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிறுபான்மையின மக்களுக்கான கட்சியாக திகழ்வதால்தான் புனித யாத்திரை மெக்காவிற்கு செல்வதற்கு, நோன்பு கஞ்சி தயாரிப்பது போன்றவற்றிற்கு எண்ணற்ற சலுகைகளை எங்களுடை அரசு வழங்கியுள்ளது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒவ்வொரு தொண்டனும் தலைவராக முடியும், முதல்வராக முடியும். இது தர்மத்திற்காக பாடுபடும் கட்சி. இது ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட ஆலமரமாக இவ்வியக்கம் திகழ்கிறது.

திமுக ஆட்சியில் தான் நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, வன்கொடுமை, பிரியாணி கடையில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு, பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் ஆட்சி செய்த கட்சி திமுக தான் ஆனால், தற்போது தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக உள்ளது.

கனிமொழியும், திருமாவளவனும் இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாளர்கள் எனக்கூறிக் கொண்டு, இலங்கை மக்களுக்கு எதிராக போர் தொடுத்த ராஜபக்ஷேவிடம் பரிசு பெறுவதற்கு சென்று வந்தார்களே அது மக்களுக்கு தெரியாதா?

அம்மா அவர்கள் 2011-ல் தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்றபோது மக்களுக்கு நல்லதொரு திட்டங்களை, தொலைநோக்கு திட்டங்களை, தொலைநோக்கு திட்டம் என்றால் நம் எதிர்கால சந்ததியினருக்கு 500 ஆண்டு காலம் பயன்தரக்கூடிய வகையில் உள்ள திட்டங்களை அம்மா அவர்கள் பார்த்து, பார்த்து ஒவ்வொரு திட்டங்களையும் மக்களுக்கு அர்ப்பணித்தார்கள். ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், இதை வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் நிறைவாக செய்யவேண்டுமென்று எண்ணிதான், 20 கிலோ அரிசியை மாதந்தோறும் விலையில்லா அரிசியாக வழங்கினார் அம்மா. தொலைநோக்கு திட்டமாக 2023ல், ரூ.15 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு துறைகள் மூலமாக அரிய பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

அத்திட்டத்தின் மூலமாக நாட்டு மக்களின் பொருளாதார நிலை உயர்வதற்கும், வாழ்வில் அடித்தளத்தில் உள்ள மக்கள் மேல்தட்டில் உள்ள மக்களுக்கு இணையாக தங்களுடைய வாழ்க்கை நடைமுறையினை சமநிலைப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணிதான் அம்மா அவர்கள் தொலைநோக்கு திட்டத்தை கொண்டு வந்தார். தமிழகத்தில் ஏழை, எளிய குடிசை வாழும் மக்களுக்கு தரமான, உறுதியான கான்கிரீட் வீடுகளை கட்டித் தரும் நோக்கத்தோடு, தமிழகத்தில் உள்ள 16 லட்சம் குடிசை வீடுகளுக்கு பதிலாக அன்றிலிருந்து இன்று வரை கான்கிரிட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆக 2021க்குள் தமிழகத்தை குடிசைப் பகுதிகளற்ற கிராமங்களாக, குடிசைப் பகுதிகளற்ற பேரூராட்சிகளாக, குடிசை பகுதிகளற்ற நகராட்சிகளாக குடிசைப் பகுதிகளற்ற மாநகராட்சிகளாக உறுதியாக உருவாகும் என்பதை நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்.

அம்மா ஆட்சியில் பெண் குழந்தை பிறந்தால் வங்கியிலே காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு, அத்திட்டத்தின் மூலம் பெண் குழந்தை வளர்ந்தவுடன் 18 வயது அடைந்த பிறகு வட்டியுடன் சேர்த்து வழங்கக்கூடிய காப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்த பெண் வளர்ந்து திருமண வயதை எட்டுகின்ற போது வறுமையில் உள்ள அந்த பெண்ணின் திருமணம் தடைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, திருமண நிதி உதவியாக ரூ.25,000, பட்டதாரி பெண்ணாக இருந்தால் ரூ.50,000 ஆகவும், தாலிக்கு தங்கம் 4 கிராம் சேர்த்து வழங்கினார்.

மீண்டும் தமிழகத்தில் 2016-ம் ஆண்டில் அம்மா அவர்களின் ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டத்தினை 8 கிராமாக உயர்த்தி, அம்மா அவர்களின் ஆட்சியில், முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் தலைமையில் நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். பேறுகால நிதிஉதவி ரூ.6000 என இருந்தது. 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ரூ.18,000 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார் அம்மா. இன்று நாங்கள் அதனை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

மாணவச் செல்வங்களுக்காக அதிக நிதியை கல்விக்காக, கல்வி துறைக்கு ஒதுக்கி 16 வகையான கல்வி உபகரணங்கள், மாணவச் செல்வங்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா லேப்டாப், விலையில்லா பஸ்பாஸ், விலையில்லா சைக்கிள் வழங்கினார். இத்தகைய உன்னதமான திட்டங்களை மக்களுக்கு வழங்கியவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் என்று சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன்.

நமக்கும், கர்நாடகத்திற்கும் காலம்காலமாக இருந்து வந்த நதிநீர் பங்கீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் 2007ஆம் ஆண்டு காவேரி நடுவர் மன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.அப்போது அம்மா அவர்கள் தமிழகத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, மு.கருணாநிதி அவர்களை காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடுவதற்கு அரசாணை பெறவேண்டுமென்றும், அப்போதுதான் தண்ணீர் வரும் என்றும் அம்மா அவர்கள் வலியுறுத்தினார்.

ஆனால் மத்தியில், காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி 2007 முதல் 2011-ம் ஆண்டு வரை இருந்தபோது தமிழகத்தில் திமுக தான் ஆட்சிக்கட்டிலில் இருந்தது. ஆனால் தமிழகத்திற்கு எந்தவொரு தொலைநோக்கு திட்டத்தையும் கொண்டுவந்து சேர்க்கவில்லை, காவேரி நதி நீர் பங்கீட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.

மீண்டும் அம்மா அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன், இந்தப் பிரச்சினையை தீர்க்க 2012-ம் ஆண்டு, பலமுறை டெல்லி சென்று, அன்றைய காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சியில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிடம், காவேரி நதிநீர் நடுவர் மன்ற ஆணையை மத்திய அரசிதழில் (கெசட்) வெளியிடுவதற்கு பலமுறை வேண்டுகோளை விடுத்தார். அதுவும் பயனில்லாமல் போனது.

பிறகு உச்சநீதிமன்றம் சென்று வாதாடி, போராடி தொடர் சட்டப்போராட்டம் நடத்தி அம்மா அவர்கள் 2013-ம் ஆண்டு காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்த ஒரே தலைவர், ஒரே முதலமைச்சர் அம்மா அவர்கள் தான். மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது திமுக அதை செய்யவே இல்லை.

தனது 33 ஆண்டு கால அரசியல் பொதுவாழ்வில்தான் மகிழ்ச்சியடைந்த நாளாக, காவேரி நதிநீர் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் தான் என்று நெகிழ்ச்சியுடன் அம்மா அவர்கள் சொன்னார் என்பதை இவ்விடத்தில் தங்களுக்கு நினைவூட்ட நான் கடமைப்பட்டுள்ளேன். 22 ஆண்டுகாலம் தமிழகத்தில் ஆட்சி செய்த ஒரே கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொல்லிக்கொள்வதற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

திமுக-காங்கிரஸ் கட்சிகள் சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷேவை போர்குற்றவாளியாக நிறுத்துவற்கு கோரிக்கை விடுத்தார்களா?அம்மாவின் ஆட்சியில் தான் ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் என்ற நிறைவான நல்ல ஆட்சியை அமைத்துத் தரவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு மாதந்தோறும் 20 கிலோ அரிசியை அதுவும் விலையில்லா அரிசியை வழங்கும் திட்டத்தினை அம்மா அவர்கள் அறிவித்தார்.

நாம் காலம் காலமாக பெற்றுவந்த ஜீவாதார உரிமைகளை இப்பொழுது கூட்டியிருக்கின்ற கூட்டணிதான் அப்பொழுதும் அமைத்திருந்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை இலங்கை தமிழ்கள் இலங்கையில் அல்லல்பட்டு இருந்தார்கள். அங்கு சம உரிமை கேட்டார்கள். ஆண்டு கொண்டிருந்த ராஜபக்சே கொடுக்க மறுத்துவிட்டார். இதன் காரணமாக அங்கு 2009 ல் மிகப்பெரிய போர் நடைபெற்றது. அப்பொழுது ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்தவர்கள் அப்பொழுது அவர்களுக்கு ஏற்கனவே உளவுத்துறையின் மூலம் அவர்களுக்கு தெரியும் அங்கு போர் நடைபெற இருக்கின்றது என்று. அவர்கள் ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தால் போதும் அதுமட்டும் இல்லாமல் இந்திய இராணுவ தளவாடங்கள் இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க அங்கு அனுப்பப்பட்டது சரி எச்சரிக்கை விடுக்கவில்லை.

அப்பொழுது கருணாநிதி ஒரு நாடகம் ஆடினார் உண்ணாவிரம் இருந்தேன் என்றார். நான் தான் மத்திய அரசிடம் சொல்லி போர் நிறுத்தப்பட்டது என்று சொன்னார். அதை நம்பி இலங்கை தமிழர்கள் பதுங்கு குழியில் பதுங்கி இருந்த 40,000 குழந்தைகள் அப்பொழுது குண்டுமழை பெய்து நாற்பதாயிரம் குழந்தைகள் இறந்தார்கள். அக்குழந்தைகள் இறப்பதற்கு யார் காரணம்? அன்று ஆண்டு கொண்டிருந்த காங்கிரசும், திமுகவும் தான். இதனால் என்ன பயன் இலங்கையில் 4,00,000 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அதுமட்டும் இல்லாமல் 5,00,000 பேர் சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள். இவர்களை காப்பாற்ற முடியாத ஆட்சியாக அப்பொழுது இருந்து வந்தது. இந்த பகுதிக்கான பல்வேறு தேவைகள் அறிந்தும், புரிந்தும் இப்பகுதிக்கு தொலைநோக்கு திட்டங்களையும் ஜனநாயகத்தில் நமக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் மெகா கூட்டணியை அமைத்து மகுடம் ஏற்றும் வெற்றி கூட்டணியை அமைத்துள்n ளாம். அ.இ.அ.தி.மு.க ஆட்சி இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இது அம்மாவின் ஆட்சி, இது மக்களுக்கான ஆட்சி.

அம்மா வழியில் இன்று சிறப்பான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதை திமுகவினரால் பொறுத்துகொள்ள முடியாமல் பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். தற்போது அமைந்துள்ள மெகா கூட்டணி, மகுடம் ஏற்றும் வெற்றி கூட்டணி.

தி.மு.க.வினர் வன்முறை கலாச்சாரத்தை தூண்டி விட்டே பழக்கப்பட்டவர்கள். எந்த காலத்திலும் இனிமேல் தி.மு.க. ஆட்சிக்கே வர முடியாது. ஸ்டாலின் முதலமைச்சராவது பகல் கனவு தான். ஓசி பிரியாணிக்கும், புரோட்டாவுக்கும் கடைகளில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு கடைகளை நாசப்படுத்துபவர்கள் தி.மு.க.வினர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நாடு என்னாகும் என்று மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள்.

அவர்கள் எப்பொழுதுமே வன்முறை கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள். கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது அவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டங்களும், நில அபகரிப்புகளும், கந்துவட்டி கொடுமைகளுமே இதற்கு சான்று ஆகும். எனவே இனி எக்காலத்திலும் தி.மு.க.வை மக்கள் ஆட்சிக்கு வர விட மாட்டார்கள். ஸ்டாலின் முதலமைச்சராக வரவே முடியாது.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தலில் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க வேட்பாளர், டாக்டர்.அன்புமணி, பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் எ.கோவிந்தசாமி மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து வரலாற்று சாதனையை நிகழ்த்துமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.