திருநெல்வேலி

தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு : நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா.

திருநெல்வேலி:-

நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயன்றதாக தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரியாக தாக்கி வீட்டில் வைத்து பொதுமக்கள் பூட்டினார்கள்.

இதுபற்றிய விபரம் வருமாறு;-

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந்தேதி நடைபெறுகிறது. அத்தொகுதிக்குட்பட்ட மூலக்கரைப்பட்டி அருகே அம்பலம் என்ற கிராமத்தில் மாரியப்பன் என்பவரது வீடு உள்ளது. இவர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரிகிறார். நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பெரியகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான சரவணகுமார் தனது ஆதரவாளர்களுடன் மாரியப்பன் வீட்டில் தங்கியிருந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அந்த பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக தகவல் பரவியது.

அப்போது மாரிப்பன் வீட்டில் சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்பட சிலர் இருந்தனர். அங்கு அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த அரியகுளம் பகுதியை ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் மாரியப்பன் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்கள் நீங்கள் எப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கலாம் என்று தி.மு.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பொதுமக்களையும், இளைஞர்களையும் தி.மு.க. எம்.எல்.ஏ. தகாத வார்த்தைகளில் திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சரவணக்குமார் எம்.எல்.ஏ். உள்பட 4 பேரையும் தாக்கி அவர்கள் கையில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கீழே தள்ளி விட்டனர். இதையடுத்து 4 பேரையும் அந்த வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டனர்.

தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை திறந்து 4 பேரையும் வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 78 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து பறக்கும் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய முயன்றதாக தி.மு.க. எம்.எல்.ஏ. உள்பட 7 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.