சிறப்பு செய்திகள்

தி.மு.க.- காங்கிரசில் தொண்டன் உயர் பதவிக்கு வரவே முடியாது – துணை முதலமைச்சர் கடும் தாக்கு…

திருப்பூர்:-

அ.இ.அ.தி.மு.க.வில் மட்டுமே சாதாரண தொண்டன் முதலமைச்சராக முடியும். தி.மு.க.விலோ, காங்கிரசிலோ தொண்டன் உயர் பதவிக்கு வரவே முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மாஸ்கோ நகர், கொங்கு மெயின்ரோடு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.,க்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பிரச்சாரத்தின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

திருப்பூரில் கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் உங்கள் நல்லாதரவை பெற்றவர். இந்த பகுதியில் தேர்வு செய்யப்பட்டதும், மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதிலும், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் நல்ல நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவார். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் 2011-ல் ஆட்சி பொறுப்பேற்று, நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்த முதலமைச்சராக இருந்தார். ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையான உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இதை நிறைவாக ஆட்சியாளர் நாட்டு மக்களுக்கு தர வேண்டும். அதைத்தான் அம்மா அவர்கள் தந்தார்.

தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் உண்ண உணவாக 20 கிலோ அரிசியை தந்து தமிழகத்தில் உணவு பாதுகாப்பினை அம்மா அவர்கள் உறுதி செய்தார். வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு, குடிசைப் பகுதிகளில் வாழுகின்ற மக்கள் கணக்கெடுக்கப்பட்டு, 2023-க்குள் அனைத்து குடிசைப்பகுதி மக்களுக்கும் தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. 2023-க்குள் உறுதியாக குடிசைப்பகுதியில் வாழும் மக்களுக்கு தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.

பெண்கள் நாட்டின் கண்கள் என்று அம்மா அவர்கள் செயல்பட்டார். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால் நிதியுதவி தந்து அந்த நிதி வங்கியில் வைக்கப்பட்டு, 18 வயதாகும் போது வழங்கப்படுகிறது. திருமண உதவியாக 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு படித்த பெண்ணாக இருந்தால் 50 ஆயிரம் பணமும், 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டு வருகிறது. குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மிக்சி, கிரைண்டர், பேன் விலையில்லாமல் அனைவருக்கும் வழங்கி உள்ளார். மேலும் பொங்கல் பரிசாக பச்சரிசி, வெல்லம் உள்ளிட்டவை வழங்கினார்.

தற்போது அம்மா அவர்களின் அரசு 1000 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்குகிறோம். மேலும் பொதுமக்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் கழக அரசு இந்த நாடாளுமன்ற தேர்தலோடு காணாமல் போகும் என்று கூறுகிறார். எப்படி காணாமல் போகும். அம்மா அவர்கள் ஒன்றரை கோடி தொண்டர்களுடன் மாபெரும் இயக்கமாக உருவாக்கி வைத்துள்ளார். மு.க. ஸ்டாலின் கலர் கலராக சட்டை போட்டு பல நாடகங்களை நடத்தி வருகிறார். அது எல்லாம் இங்கு பலிக்காது. நான் ஸ்டாலினிடம் கேட்கிறேன் ‘காங்கிரஸ் கட்சியிலும், திமுகவிலும் ஒரு தொண்டன் முதலமைச்சராக வர முடியுமா? ஒரு தொண்டன் ஒருங்கிணைப்பாளராக வர முடியுமா? அண்னா திமுக வில் மட்டும் தான் வர முடியும்.

மக்களால் நான் மக்களுக்காக நான் என வாழ்ந்த அம்மா அவர்கள், இந்த இயக்கம் நூறாண்டுகள் நிலைத்திருக்கும் என கூறினார். இன்று அம்மா அவர்கள் தெய்வமாக நின்று பார்த்து கொண்டிருக்கிறார். நாங்கள் அம்மா அவர்களின் திட்டங்களை நிறைவேற்றுகிறோம். ஆகவே தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தான் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி என்ற சாதனையை உருவாக்கி தாருங்கள்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

முன்னதாக துணை முதலமைச்சருக்கு மாஸ்கோ நகர், கொங்கு மெயின் ரோட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வரவேற்பு அளித்தனர்.