தற்போதைய செய்திகள்

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ முழக்கம்…

மதுரை:-

ஜீவாதார உரிமையை பறிகொடுத்து தமிழர்களின் வயிற்றில் அடித்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகர் மாவட்டம் பரவை பேரூர் கழகம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத்கமிட்டி ஆலோசனை கூட்டம், பரவையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பரவை பேரூர் கழக செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று, மக்களுக்காக வாழ்ந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். புரட்சித்தலைவர் இருந்த போது இந்த இயக்கத்தில் 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அவரது மறைவிற்குப்பின் பிளவுபட்ட இந்த இயக்கத்தை மீட்டு இரவு பகல் பாராது உழைத்து கண் இமைபோல் காத்து ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட தூய இயக்கமாக உருவாக்கியது மட்டுமல்லாது, இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கினார்.

அம்மாவின் மறைவிற்குப்பின் எதிர்கட்சிகள் கழகத்தை அழிக்க வேண்டும், ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பல்வேறு சதி செயல்களை செய்தனர். அதையெல்லாம் அம்மா அவர்களின் ஆத்மா துணையோடு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தகர்த்தெறிந்து இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகின்றனர். அது மட்டுமல்ல அம்மா அவர்கள் எப்படி மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்பார்களோ அதே போல் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக் கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இலையோடு, தாமரை, மாங்கனி மற்றும் வெற்றி முரசு கொட்டும் வகையில் முரசு ஆகியவை இணைந்துள்ளன.

கழகத்தின் வெற்றிக் கூட்டணியை கண்டு ஸ்டாலின் மிரண்டு போய் உள்ளார். எங்கள் கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக மோடிஜி அவர்களை முதலமைச்சர் முன்மொழிந்து பேசினார். ஆனால் தி.மு.க. கூட்டணியில் ராகுலை ஸ்டாலின் மீண்டும் முன்மொழிந்து பேச முடியுமா? அப்படி பேச அவருக்கு தைரியம் உள்ளதா, யார் பிரதமர் வேட்பாளர் என்ற குழப்பத்தில் உள்ளது தான் அவர்கள் கூட்டணி. இந்த கூட்டணிதான் நமது தமிழக ஜீவாதார உரிமையை காவு கொடுத்து தமிழர்கள் வயிற்றில் அடித்த கூட்டணி. இதற்கெல்லாம் மக்களே தகுந்த பாடம் புகட்ட தயாராகி விட்டனர்.

மதுரை மாநகர் மாவட்டம் என்றால் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் கோட்டையாகும். அதில் பரவை பேரூராட்சி, முதன்மையாகும். ஏனென்றால் இங்குள்ள மக்கள் அனைவரும் கழகத்திற்கு வெற்றியைத்தான் பரிசாக தந்து வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகம் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்திலேயே மதுரை நாடாளுமன்ற தொகுதி தான் அதிகப்படியான வாக்குகளை பெற்றுத்தந்து எதிர்கட்சிகளை டெபாசிட் இழக்கச்செய்தது என்று வரலாறு படைக்கும் வகையில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெற வேண்டும்.

அதற்குரிய வெற்றியை பெற்றுத்தந்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் திருக்கரங்களில் ஒப்படைக்கும் வரை பூத் கமிட்டி அனைத்து கழகத்தினர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகளும் இரவு, பகல் பாராது அயராது பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் சி.தங்கம், மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, முன்னாள் துணைமேயர் கு.திரவியம், கழக இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், கழக விவசாய பிரிவு இணை செயலாளர் சீதாராமன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் ஜமால் மொய்தீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.