தற்போதைய செய்திகள்

தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை – டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு…

திருவண்ணாமலை:-

தமிழக மக்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் தி.மு.க. எதுவும் செய்யவில்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கலசபாக்கம் பஸ் நிலையம் எதிரில் மற்றும் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் பிரச்சாரம் செய்து இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குசேகரித்தார்.

அப்போது பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;-

இத்தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பொதுமக்களிடையே ஒரு எழுச்சி தெரிகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தனித்து போட்டியிட்டு 37 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதேபோன்று இப்போது 40 தொகுதியிலும் வெற்றிபெறுவது உறுதியாகி விட்டது. இந்த மெகா கூட்டணி அமைய காரணம் இளைஞர்களை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்த வேண்டும் என்பதே. அறிவுசார், திறன்சார் வழியில் அவர்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த கூட்டணி அமைக்கப்பட்டது.

விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் என்பதற்காகவே கூட்டணி அமைத்துள்ளோம். தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டு வர வலியுறுத்தி வருகிறோம். மறைந்த முதலமைச்சர் அம்மா அவர்கள் 500 மதுக்கடைகளை மூடி படிப்படியாக மற்றவற்றை மூட நடவடிக்கை எடுத்தார். அதை நாங்கள் தற்போது கூறி வருகிறோம். தி.மு.க.வை சேர்ந்த தொழில் அதிபர்களே சாராய ஆலை நடத்தி வருகிறார்கள். மக்களுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் என காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. இதேபோல் தி.மு.க.வும் எதுவும் செய்யவில்லை. திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்குகள் அளிக்க வேண்டும். அமோக வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றிபெற இரவு பகலாக பாடுபட வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

இக்கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர்.எஸ்.இராமச்சந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசிமோகன் எம்.எல்.ஏ, கழக வேட்பாளர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வி.பன்னீர்செல்வம், பா.ம.க தேர்தல் பிரச்சார அணி செயலாளர் எதிரொலி மணியன், பா.ம.க மாநில துணைத்தலைவர் துரை, மாநில துணை பொது செயலாளர், காளிதாஸ், மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு, பா.ஜ.க மாவட்ட தலைவர் நேரு, தா.ம.க மாவட்ட தலைவர் மணிவர்மா, பா.ம.க மாவட்ட செயலாளர்கள் ஜானகிராமன், பிரசாத், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஏ.கே.அரங்கநாதன் மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.