சிறப்பு செய்திகள்

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை தமிழகத்தை விட்டு விரட்டியடிப்போம் – துணை முதலமைச்சர் அறைகூவல்…

மதுரை:-

தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்யாமல் துரோகம் செய்வதையே தொழிலாக கொண்ட தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை இத்தேர்தலோடு விரட்டியடிக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறைகூவல் விடுத்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் நேற்று கழக வேட்பாளர் எஸ்.முனியாண்டியை ஆதரித்து பல்வேறு இடங்களில் சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வளையன்குளம், சிந்தாமணி, வில்லாபுரம், அவனியாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் துணை முதலமைச்சர் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களிடையே கழக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

முன்னதாக கழக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத் மற்றும் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் துணை முதலமைச்சரை வரவேற்றனர்.

தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆற்றிய தேர்தல் பிரச்சார உரை வருமாறு:-

திருப்பரங்குன்றம் தொகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அவற்றை நிறைவேற்றும் திறமை படைத்தவர் கழக வேட்பாளர் முனியாண்டி. அவர் உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவார் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியும், தி.மு.க. ஆட்சியும் இருந்தன. ஆனால் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சியும், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் ஆட்சியும் தான் பொற்கால ஆட்சியாகும். ஏனென்றால் இந்த தலைமுறை மட்டுமல்ல வருங்கால சந்ததியினரும் பயனடையும் வகையில் பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வந்து அவற்றை அமல்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

பெண்கள் முன்னேறினால் தான் அவர்கள் வாழ்வு வளம்பெற்றால் தான் ஒரு நாடு வளம்பெற முடியும் என்பதை உணர்ந்து பெண்களுக்கான நலத்திட்டங்களை மளமளவென அறிவித்து அவற்றை செயல்படுத்தினார். யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் விலையில்லா அரிசி வழங்கினார். குருவிகளுக்கு கூட கூடு உண்டு, மனிதர்களுக்கு வீடு இல்லையே என்ற குறை வந்து விடக்கூடாது என்பதை உணர்ந்து குடிசைகளற்ற தமிழகத்தை உருவாக்க திட்டம் திட்டி இன்னும் 2,3 ஆண்டுகளில் அந்த லட்சியம் முழுமையாக நிறைவேற இருக்கிறது.

இந்தியாவிலேயே 2 பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு அந்த குழந்தைகள் பெயரில் வைப்பு நிதியை அரசு சார்பில் செலுத்தி அவர்கள் திருமணமாகும் போது அவர்களுக்கு திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம் போன்ற பல்வேறு திட்டங்களை அமல்படுத்திய ஒரே தலைவி புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான். சிறுபான்மை மக்களின் நலன்காக்கும் வகையில் அனைத்து மதத்தினருக்கும் பல்வேறு சலுகைகளையும், நன்மைகளையும் செய்து கொடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நிறைவேற்றிய திட்டங்களை மட்டுமல்ல கூடுதலாக சில திட்டங்களையும் அவர் வழிநின்று செயல்படும் இந்த அரசு கொண்டு வந்து அமல்படுத்தி வருகிறது. கடந்த பொங்கலின்போது பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்கினோம். மழையில்லாத காரணத்தால் கடும் வறட்சி நிலவியதால் 65 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க. நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடர்ந்தது. தேர்தல் முடிவுற்றதும் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அந்த பணம் அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் உறுதியாக வழங்கப்படும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இயக்கம் உலகம் கண்டிராத ஒரு மாபெரும் இயக்கமாகும். இது யாராலும் வெல்ல முடியாத ஓர் இயக்கம். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த இயக்கத்தை அழித்து விட பல்வேறு சதித்திட்டங்களை தீட்டினார். அவற்றையெல்லாம் முறியடித்து தான் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை உலகப்பெரும் இயக்கமாக உயர்த்தி இருக்கிறார். எனவே ஸ்டாலின் தலைகீழாக நின்றாலும் இந்த இயக்கத்தை ஒரு இம்மி அளவு கூட அசைக்க முடியாது. அவருடன் கூட்டு சேர்ந்தி்ருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிதம்பரம் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.சை துடைத்தெறிய வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

எங்களை துடைத்தெறிவதற்கு முன்னால் தமிழக மக்கள் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை இருந்த இடம் தெரியாமல் ஓட ஓட விரட்டியடிப்பார்கள் என்பது அடக்கத்துடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர் பல ஆண்டுகாலம் மத்திய அரசில் உள்துறை அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் இருந்தவர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை வரி மத்திய அரசுக்கு செல்கிறது. தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது ஏதாவது ஒரு நல்ல திட்டத்தை அவர்கள் தமிழகத்துக்காக நிறைவேற்றினார்களா, கொண்டு வந்தார்களா?

சிதம்பரத்தின் சொந்த தொகுதியில் போய் அவரது கட்சியினரிடம் போய் கேட்டாலே சிதம்பரம் இந்த நாட்டுக்காக என்ன செய்தார் என்பதை சொல்லி விடுவார்கள். அந்த அளவுக்கு ஒரு இம்மி அளவு நன்மை கூட தொகுதி மக்களுக்காக அவர் செய்யவில்லை. காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு 2007-ம் ஆண்டு வெளியானது. அதை மத்திய அரசிதழில் வெளியிடவேண்டும் என்று அம்மா அவர்கள் பலமுறை வலியுறுத்தினார்கள். அப்போது ஆட்சியில் இருந்த சிதம்பரம் அதை கண்டுகொள்ளவே இல்லை. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியும் காது கொடுத்து கேட்க மறுத்து விட்டார்.

பிறகு அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர்தான் அந்த நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிட செய்தார். காவேரி டெல்டா விவசாயிகளுக்கே துரோகம் செய்த ஒரு கூட்டணி உண்டு என்றால் அது தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தான். ஜல்லிக்கட்டு பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததற்கு காரணமே தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி அரசு தான். ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்று மெரினா கடற்கரையில் 10 லட்சம் மக்கள் திரண்டு போராடினார்கள். நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் இதன் முக்கியத்துவத்தை விளக்கி கூறியதுடன் அவர் ஒரே நாளில் 4 துறைகளுக்கு ஆணை பிறப்பித்து அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடைபெற ஆவன செய்தார். ஆனால் இவற்றையெல்லாம் தி.மு.க.வினரும், காங்கிரஸ் கட்சியினரும் சரி வெளியில் சொல்ல வெட்கப்படுகிறார்கள்.

தி.மு.க. ஒரு வன்முறை கட்சி என்பது நாடறிந்த உண்மையாகும். அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தமிழக மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் தான் அம்மாவிடம் 32 ஆண்டுகளுக்கு மேல் இருந்து அவரது உப்பை தின்ற துரோக சக்தியின் உதவியோடு குறுக்கு வழியில் இந்த ஆட்சியை கவிழ்த்து விட்டு தான் முதலமைச்சராக வேண்டும் என்று ஸ்டாலின் துடிக்கிறார். அம்மா அவர்களால் தீய சக்தி என்று வர்ணிக்கப்பட்ட ஒரு சக்திக்கு அம்மாவின் உப்பை தின்றவர்கள் துணை போகிறார்கள் என்றால் அவர்களை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது. எனவே வரும் தேர்தலில் கழக வேட்பாளரை நீங்கள் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.