சிறப்பு செய்திகள்

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியை ஓடஓட விரட்டியடிக்க வேண்டும் – சூலூரில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சபதம்…

கோவை:-

ஈழத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டதற்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை தேர்தலில் ஓட ஓட விரட்டியடிக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

கோவை மாவட்டம் சூலூரில் கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து சூலூர் சட்டமன்ற தொகுதி கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கி பேருரையாற்றினார். முன்னதாக சூலூர் ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் சூலூர் ஒன்றிய சேர்மன் மாதப்பூர் பாலு வரவேற்றார்.
கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் செ.ம.வேலுசாமி அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தோப்பு க.அசோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கோவை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஏற்புரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பா.ஜ.க வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

பிரதமர் மோடி சிறப்பாக பணியாற்றி வருகிறார். இந்திய நாட்டிற்கு பாதுகாப்பாக இருக்கிறார். ஆகவே மத்தியில் நிலையான, வலிமையான ஆட்சி அமைய தமிழகத்தில் கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இணைந்து எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

கோவை மாவட்டத்தில் 50 ஆண்டுகள் இல்லாத வகையில் மாபெரும் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. மெட்ரோ ரயில், ஸ்மார்ட் சிட்டி திட்டம், உக்கடம் மேம்பாலம், கூட்டு குடிநீர் திட்டம், அனைத்து சாலைகளும் விரிவாக்கம், அரசு கலை கல்லூரிகள், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனை, விமான நிலையம் விரிவாக்கம் என எண்ணற்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

3 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 70 ஆண்டுகால பிரச்சினையான அவிநாசி- அத்திக்கடவு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கோதாவரி காவேரி திட்டம், ஆனைமலை நல்லாறு திட்டம் போன்றவை நிச்சயம் செயல்படுத்தப்படும்.கழகத்தின் கோட்டையாக திகழும் சூலூர் தொகுதியில் எண்ணற்ற பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த தொகுதியின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு மறைந்த சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் பணியை அனைவரும் அறிவர். கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளில் அதிகமான வாக்குகளை கழகத்திற்கு பெற்று தருவது சூலூர் தொகுதிதான். ஆகவே இம்முறையும் இங்கு அதிக வாக்குகளை பெறவேண்டும்.

ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படுகிற எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதை தடுத்து நிறுத்துவதுதான் தி.மு.கவின் வாடிக்கை.நாம் அமைத்துள்ள மெகா கூட்டணியை பார்த்தவுடன் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. மு.க.ஸ்டாலினை வைகோ பேசியது போல் வேறு யாராவது பேசியிருக்கிறார்களா? இன்று அவர்கள் கூட்டணி அமைத்துள்ளனர். ஆனால் மு.க.ஸ்டாலின் நமது கூட்டணியை பற்றியே பேசிவருகிறார். சாதிக் பாட்சா கொலை வழக்கை பற்றி அதிகம் பேசியவர் வைகோ தான். நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை தருவதே திமுகவின் தேர்தல் அறிக்கையாகும். ஊழலின் மறு உருவமாக திகழும் திமுக- காங்கிரஸ் கூட்டணியை அடியோடு துரத்துவோம்.

17 ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் அங்கம் வகித்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது. துரோகம் மட்டும்தான் செய்தது. காபினட் பதவியை பெறுவதிலும், அதை காப்பதிலுமே கவனம் செலுத்தியவர்கள் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. நமது ரத்த சொந்தங்களை இலங்கையில் கொன்று குவித்தபோது திமுக நடத்திய நாடகத்தை மறந்துவிடவில்லை மக்கள்.

மத்தியில் அமைவது பா.ஜ.க. தலைமையிலான ஆட்சிதான். சி.பி.ராதாகிருஷ்ணன் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவார். கழக அரசு கொண்டு வந்துள்ள எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டமாவது ஒவ்வொரு வீட்டிலும் பெற்றிருப்பர். ஆகவே திட்டங்களை எடுத்துக்கூறி கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து அயராது பாடுபடுங்கள். நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.