தற்போதைய செய்திகள்

தி.மு.க.- காங்கிரஸ் செய்த துரோகங்களை மக்களிடம் சொல்லி வாக்கு சேகரியுங்கள் – கழக நிர்வாகிகளுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வேண்டுகோள்

விருதுநகர்:-

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான தி.மு.க., காங்கிரஸ் செய்த துரோகங்களை மக்களிடம் சொல்லி கழக நிர்வாகிகளுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், விருதுநகர் எம்.பி. தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமி, ராமநாதபுரம் எம்பி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை ஆதரித்து அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கடந்த 25 நாட்களுக்கு மேலாக தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றார். இந்நிலையில் சிவகாசி, திருத்தங்கல், திருவில்லிபுத்தூர், விருதுநகர்,அருப்புக்கோட்டை, காரியாபட்டியில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சந்திரபிரபா எம்.எல்.ஏ. உள்பட ஒன்றிய, நகர செயலாளர்கள் உட்பட அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

ஒவ்வொரு நிர்வாகியும் தங்களை வேட்பாளராக நினைத்து ஒவ்வொறு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டும். இன்று நீங்கள் சேகரிக்கும் வாக்குகள் வரும் உள்ளாட்சி தேர்தலில் உங்களை வெற்றிபெற செய்ய வைக்கும். மத்திய, மாநில அரசின் சாதனைகளை கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்.

உறங்காமல் விழித்திருந்து வாக்கு சேகரியுங்கள். விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது என்று வெற்றி செய்தி பிரதமர் மோடிக்கும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும் கிடைக்க வேண்டும். அனைத்து சார்பு அணி நிர்வாகிகளும் ஒற்றுமையாக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சிறுபான்மை வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்க வேண்டும். கூட்டணியில் உள்ள நிர்வாகிகளையும் அழைத்துக் கொண்டு வாக்கு சேகரிக்க வேண்டும்.

இலங்கை தமிழர்கள் படுகொலைக்கு காரணமான திமுக, காங்கிரஸ் கூட்டணியை படுதோல்லி அடைய செய்யும் வகையில் நமது கள பணி இருக்க வேண்டும். ரவுடிகளை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கதாகூா் செயல்பாடுகளை வாக்காளர்களிடம் எடுத்து கூறுங்கள். நமது கூட்டணிக்கு வாக்களிக்க வாக்காளா்கள் தயாராக உள்ளனர். அந்த வாக்குகளை நாம் அப்படியே அறுவடை செய்ய வேண்டும்.

களத்தில் அஇஅதிமுக, திமுக மட்டுமே போட்டியில் இருக்கும். மற்ற கட்சிகள் தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடும். தேர்தலுக்கு இன்னும் ஒருசில தினங்களே உள்ளதால் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் கழக அரசை தொடர் வெற்றிப்பாதையில் அழைத்து செல்லும் வகையில் கழக நிர்வாகிகள் கடுமையாக கள பணியாற்ற வேண்டும். நீங்கள் வாங்கி கொடுக்கும் வாக்குகளுக்கு உங்களுக்கான முக்கியத்துவம் உரிய நேரத்தில் கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.