தற்போதைய செய்திகள்

தி.மு.க-காங்கிரஸ் தமிழின விரோத கூட்டணி – அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் தாக்கு…

சென்னை

தி.மு.க-காங்கிரஸ் தமிழின விரோத கூட்டணி என்று மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சென்னை மண்டல அம்மா பேரவை சார்பில் நாடாளுமன்றத்தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தே.மு.தி.க வுடனான கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. விரைவில் நல்ல முடிவு வரும். அ.இ.அ.தி.மு.க மிகப்பெரிய சக்தியாக விளங்குகிறது. தி.மு.க.வினர் மெகா கூட்டணி அமையுமென நினைத்து பார்க்கவில்லை. இந்த இயற்கையான கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். ஸ்டாலின் பயத்தின் உச்சத்தில் இருப்பதால் தெளிவில்லாமல் இருக்கிறார். தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை சந்தித்த பிறகு அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை என்று கூறுவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதற்கு சமம். அதுமட்டுமின்றி அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்பையும் கூட்டணிக்காக அழைப்பார் ஸ்டாலின்.

அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றிபெறுவது நிச்சயம். ஆரம்பம் முதலே அ.தி.மு.க தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நாற்பது நமதே, நாடு நமதே என்கிற அடிப்படையில் இது வெற்றி கூட்டணியாக அமைந்துள்ளது. மெகா கூட்டணி என்கிற அடிப்படையில் தேச நலனுக்காக ஒன்றுபடுவோம் என இந்த கூட்டணியை அமைத்துள்ளோம். இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வர உள்ளனர். எனவே இறுதி முடிவை முதல்வர், துணை முதல்வர் வெளியிடுவார்கள். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது. இதற்கு துணையாக இருந்தது தி.மு.க காங்கிரஸ் கூட்டணி.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.