திருச்சி

தி.மு.க.- காங். கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி – கழக அமைப்பு செயலாளர் மு.பரஞ்ஜோதி பேச்சு…

திருச்சி:-

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி என்று கழக அமைப்பு செயலாளர் மு.பரஞ்சோதி கூறினார்.

புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்த நாளையொட்டி, திருச்சி மாநகர் மாவட்டம், ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக அவைத்தலைவரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன், கழக அமைப்பு செயலாளரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான எஸ்.வளர்மதி, மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப.குமார் எம்.பி., தலைமை கழக பேச்சாளர் சேலம் உரைமுரசு கே.ஏ.யூசுப், மாவட்ட ஆவின் தலைவர் சி.கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி பேசியதாவது:-

புரட்சித்தலைவரின் இயக்கம் இன்று இருக்கிறது என்று சொன்னால் அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் செய்த தியாகம். புரட்சித்தலைவியின் உழைப்பு. புரட்சித்தலைவியின் கருணையால், உழைப்பால், தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும், எத்தனை காலம் வந்தாலும், புரட்சித்தலைவியின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் என பாரத பிரதமர் மோடி அன்மையில் தனது டிவிட்டரில் பதிவிட்டு பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காவேரி பிரச்சினைக்கு காரணமே கருணாநிதிதான். 2007-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சர். மத்தியிலும் அவர்கள் அங்கம் வகித்த ஆட்சி நடைபெற்றது. கருணாநிதி காவேரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட ஏதாவது முயற்சி செய்தாரா? என்றால், ஒரு துளி கூட முயற்சி செய்யவில்லை. 2011-ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக ஆன பிறகுதான் உச்சநீதிமன்றம் சென்று பல சட்டப் போராட்டங்களை நடத்தி மத்திய அரசிதழில் வெளியிட செய்தார். அதனால்தான் காவேரி டெல்டா விவசாயிகள் எல்லாம் ஒன்று கூடி தஞ்சையிலே பாராட்டு விழா நடத்தி ‘பொன்னியின் செல்வி’ என்ற பட்டத்தை கொடுத்து கொண்டாடினர். தமிழ்நாடு இன்று வளமாக இருக்கிறதென்று சொன்னால் அதற்கு காரணம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சி தான்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவிற்கு பிறகு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். கழகத்தை இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எழுச்சியோடு நடத்தி கொண்டிருக்கிறார்கள். புரட்சித்தலைவி அம்மாவின் லட்சிய பாதையில் ஒரு மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

இந்த கூட்டணியை ஸ்டாலின் சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறார். கூட்டணியை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை கிடையாது. ஏனென்றால் 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி. மத்தியில் தி.மு.க அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அப்போதுதான் இலங்கையிலே 3 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். யார் ஆட்சியில் இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதையெல்லாம் மறந்து விட்டு காங்கிரசோடு தி.மு.க கைகோர்க்கிறது என்று சொன்னால் அதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி என்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஈழ தமிழர்களுக்காக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அவர்கள் உரிமைக்காக போராடி கொண்டிருக்கிறேன் என கூறும் வைகோ 3 லட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான காங்கிரஸ் மற்றும் தி.மு.கவோடு கூட்டணி சேர்ந்துள்ளதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றிபெற்று இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக கழகத்தை வளர்த்து வரலாறு படைத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதே வரலாறு இன்று திரும்பியிருக்கிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் கழக கூட்டணி வெற்றிபெற்று இந்திய பிரதமரை தீர்மானிக்க கூடிய கட்சியாக கழகம் விளங்கும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளர் மு.பரஞ்ஜோதி பேசினார்.