தற்போதைய செய்திகள்

தி.மு.க. கூட்டணி பூஜ்ஜிய கூட்டணி – அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு…

நாகப்பட்டினம்

தி.மு.க. அமைத்துள்ளது பூஜ்ஜிய கூட்டணி என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மக்களவை தொகுத்திக்கான கழக வேட்பாளர் அறிமுக கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மயிலாடுதுறை மக்களவை தொகுதி கழக வேட்பாளர் எஸ்.ஆசை மணியை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:-

தி.மு.கவினர் தேர்தல் பிரச்சாரத்தின் போது மீத்தேன், ஹட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை கழக அரசு தடுக்க வில்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். அவர்களின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக தமிழகத்தின் மீத்தேன் எடுக்கும் திட்டத்துக்கான அரசாணையில் கையெழுத்து போட்டது மு.க.ஸ்டாலின் தான். ஆனால் அத்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றியவர் அம்மா என்பதை நாம் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். மேலும் பா.ஜ.க இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என பிரச்சாரத்தில் ஈடுபடும்.

பாபர் மசூதி, ராம ஜென்ம பூமி பிரச்சினையின் போது ஆட்சியில் இருந்தவர் நரசிம்மராவ். அப்போது அந்த பிரச்சினையை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கட்சி காங்கிரஸ், டாக்டர் அப்துல் கலாமை குடியரசு தலைவராக நியமித்தது பா.ஜ.க. அவரை இரண்டாவது முறை குடியரசு தலைவராக்க முயன்ற போது அதை தடுத்தது காங்கிரஸ்.

கழகத்தை பரம்பரை அரசியல் என்று சொல்வது தவறு. பரம்பரை அரசியல் என்றால் இந்தியாவில் நேரு குடும்பத்தினர், நேருவுக்கு பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என தொடர்வது தான். தமிழகத்தில் கருணாநிதி, ஸ்டாலின், உதயாநிதி ஸ்டாலின், தற்போது சபரீசன் என வாரிசு அரசியல் தொடர்வது தெரிந்ததே. கழகத்தில் பரம்பரை அரசியல் இல்லவே இல்லை.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் கழகம் தனித்தே 3 லட்சம் வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது மெகா கூட்டணி அமைந்துள்ளதால் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். கழகம் அமைத்துள்ளது ராஜ்ய கூட்டணி. தி.மு.க. அமைத்துள்ளது பூஜ்ஜிய கூட்டணி.

இவ்வாறு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசினார்.