தற்போதைய செய்திகள்

தி.மு.க.வால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது – முதலமைச்சர் கடும் தாக்கு…

மதுரை

அம்மா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் கழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் தி.மு.க.வால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை ஆதரித்து பழங்காநத்தம், கட்டபொம்மன் சிலை, கீழவாசல் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது :-

இந்திய நாடு மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து வளர்ச்சி அடைவதற்கு நாட்டிற்கு தேவை நிலையான, உறுதியான தலைமை. அந்த தலைமைக்கு பொருத்தமாக கருதப்படுபவர்தான் இன்றைய பாரதப் பிரதமர் நரேந்திரமோடி. அவர் மீண்டும் நாட்டின் பிரதமராக வருவதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2016ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வகுத்துத்தந்த பாதையில் தான் இந்த அரசும் செயல்பட்டு வருகிறது. அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி கொள்கை பிடிப்புடன் உள்ள கூட்டணி. இந்த கூட்டணிக்கு கிடைத்துள்ள ஆதரவைப்பார்த்து ஸ்டாலின் மிரண்டு போய், அரண்டு போய் இருக்கிறார். பொதுக்கூட்டங்களில் என்ன பேச வேண்டும் என்று கூட தெரியாமல் பேசி வருகிறார்.

பாரதிய ஜனதா கட்சியுடன் அனைத்து மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. இந்தக்கூட்டணி வெற்றி பெற்றால் நரேந்திரமோடி தான் இந்த நாட்டின் பிரதமர் எனச் சொல்லி நாங்கள் வாக்கு கேட்கிறோம். ஆனால் தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் பிரதமர் யார் என்றே சொல்ல முடியவில்லை. மக்கள் யாரை நம்பி வாக்களிப்பார்கள். இந்த நிலை தான் அந்த கூட்டணியில் ஏற்பட்டுள்ளது.

மாயாவதி, மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் தாங்களும் பிரதமராவதற்கு தகுதியுள்ளவர்களாக கருதுகிறார்கள். ஸ்டாலின் ஒருவர் மட்டும் தான் ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் என சொல்லி வருகிறார். இவ்வாறு முரண்பட்ட கருத்துக்கள் உடைய எதிர்கட்சிகளால் நிலையான ஆட்சியை தர முடியுமா. ஆனால், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி வெற்றி பெற்று நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றால் மட்டுமே, ஒரு நிலையான, வலிமையான ஆட்சியை தரமுடியும்.

நாட்டுமக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற அரசாக அம்மாவுடைய அரசு செயல்படுகிறது. ஒத்த கருத்துடைய கட்சிகள் எல்லாம் சேர்ந்து, இந்த கூட்டணியை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்ததால், அ.இ.அ.தி.மு.க மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதாக பேசுகிறார். தி.மு.க.வும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. பா.ஜ.க. மந்திரிசபையிலும் தி.மு.க. இடம்பெற்றிருந்தது. இவர்களோடு கூட்டணி வைத்தால் பா.ஜ.க நல்ல கட்சி, எங்களோடு கூட்டணி வைத்தால் பா.ஜ.க மதவாத கட்சியா? இது என்ன நியாயம்.

15 ஆண்டு காலம் தி.மு.க. மத்திய மந்திரிசபையில் இருந்தபோது, தமிழ்நாட்டிற்காக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். தி.மு.க. தான் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததாக தொடர்ந்து பேசி வருவது உண்மைக்கு மாறானதாகும். நாட்டு நலனில் எவ்வித அக்கறையும் செலுத்தாத தி.மு.க. குடும்ப நலனில் மட்டும் அக்கறை செலுத்தி, குடும்பத்தில் இருப்பவர்கள் மட்டுமே ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என நினைக்கின்ற கட்சி தி.மு.க. வேலூரில் தி.மு.க. நிர்வாகிகள் வீட்டில் பணம் பிடிபட்டதன் மூலம் தி.மு.க. தற்போது கையும் களவுமாக பிடிபட்டுள்ளது.

தி.மு.க. கட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. ஒரு கட்சி ஆட்சியிலே இருக்கின்ற பொழுது மக்களுக்காக திட்டங்களைத் தீட்டி மக்கள் பணி செய்திட வேண்டும். ஆனால் அதை விட்டு விட்டு பதவியை தவறாக பயன்படுத்தி, தங்கள் குடும்பத்தை மட்டும் வளமாக்குகின்ற கட்சி தான் தி.மு.க. தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் செல்ல வேண்டு மென்றால் மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தான் தேவையான நிதியைப் பெற்று வளர்ச்சித்திட்டங்களை நிறைவேற்ற முடியும். அம்மா அவர்கள் மக்களுக்காக அறிவித்த திட்டங்கள் அனைத்தும் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியுதவியாக ரூ.2000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு வழங்கும் பணி நடைபெற்றது. ஆனால் தி.மு.க. தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் வழங்கப்படும். மதுரை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில் காளவாசல் சந்திப்பில் ரூ.54 கோடி மதிப்பில் உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியாக உருவாக்கித்தரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே, மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.