சேலம்

தி.மு.க.வின் குற்றச்சாட்டுகளை முதல்வர் தூள் தூளாக்குவார் – சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் முழக்கம்…

சேலம்:-

தி.மு.க.வின் குற்றச்சாட்டுகளை முதல்வர் தூள் தூளாக்குவார் என்ற சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன் கூறினார்.

சேலம் புறநகர் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் மாசிநாயகன்பட்டி ஊராட்சியில் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அயோத்தியாபட்டணம் ஒன்றிய கழக செயலாளர் ஏ.பி.மணி தலைமை வைத்தார். சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது:-

தமிழக மக்களின் நலனில் அக்கறை கொண்டு தினந்தோறும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்களின் முதல்வராக மக்களின் உள்ளங்களில் நிறைந்திருக்கிறார். தி.மு.க.வினர் பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது தெரிவித்து வருகின்றனர். அந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் தமிழக மக்களாகிய உங்களுடைய அவர் தவிடுபொடி ஆக்கி விடுவார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி அம்மா ஆகிய இரு பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கத்தினை கண்ணை இமை காப்பது போல அம்மா அரசையும் கட்டிக் காத்து வருகிறார்.

முதலமைச்சர் பொங்கல் பரிசு ரூ.1000 தித்திப்பான பொங்கலை கொண்டாட தமிழக மக்களுக்கு வழங்கினார். தற்போது 70 லட்சம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 வங்கிக் கணக்கில் வழங்கி அவர்களில் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கிறார். ஒவ்வொரு பூத் கமிட்டி முகவர்களும் பத்து வாக்காளர்களை சந்தித்து கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் ஒன்றரை லட்சம் வாக்குகளில் புரட்சித்தலைவர் கண்டெடுத்த இரட்டை இலை சின்னம் வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் இனிவரும் எந்த தேர்தலாக இருந்தாலும் கழகம் தான் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சேலம் அம்மா பேரவை புறநகர் மாவட்ட இணை செயலாளர் மெடிக்கல் ராஜா ராஜசேகரன், ஒன்றிய அவைத்தலைவர் பொன் தனபால், முன்னாள் அயோத்தியாபட்டணம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் பூங்கொடி வேணுகோபால், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரவி, கோராதுபட்டி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் வீராணம் முத்துசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு புறநகர் மாவட்ட பொருளாளர் எம்.டி.வி.அருண்குமார், அயோத்தியாபட்டணம் பேரூர் கழக செயலாளர் மார்க்கெட் பெரியசாமி, தகவல் தொழில்நுட்ப பிரிவு குணசேகரன், இலக்கிய அணி துணைத்தலைவர் பி.ஹரி குண்டுமணி, கிளைக் கழகச் செயலாளர்கள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஊராட்சிக் கழகச் செயலாளரும், மாசிநாய்க்கன்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவருமான டி.வேணுகோபால் நன்றி கூறினார்.