சிறப்பு செய்திகள்

தி.மு.க.வின் சூழ்ச்சி பலிக்காது – முதலமைச்சர் பரபரப்பு பேச்சு…

திருப்பூர்:-

மக்களவை குழப்பி கொல்லைப்புற வழியாக வெற்றி பெற நினைக்கும் தி.மு.க.வின் சூழ்ச்சி பலிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து பெருந்துறை, திருப்பூர், ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது :-

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, இந்நாட்டின் பாதுகாப்பிற்கு உறுதியான வலிமையான தலைமை தேவை. அந்த தலைமைக்கு தகுதியானவர் நரேந்திர மோடி. அவர் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பதற்காக கழகம் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை சந்திக்கிறது. நான் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்., பெருந்துறை பகுதியில் 15 ஆண்டுகாலம் வியாபாரம் செய்து வந்தேன். இந்தப் பகுதி எனக்கு மிகவும் பழக்கப்பட்ட பகுதியாகும். இந்த இடத்தில் மாநிலத்தின் முதலமைச்சராக வந்து உங்கள் முன் உரையாற்றுவதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். பெருந்துறை தொகுதி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் எஃகு கோட்டையாகும்.

இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் அம்மா வழியில் செயல்படும் இந்த அரசு நிறைவேற்றியுள்ளது. மக்களின் தேவையறிந்து திட்டங்களை செயலாற்றுவது அம்மாவின் அரசு. ஆனால் தி.மு.க. பொய்யான தேர்தல் வாக்குறுதியை அளித்து, நாங்கள் இதை செய்து தருவோம், அதை செய்து தருவோம் என மக்களை குழப்பி கொல்லைப்புறத்தின் வழியாக வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த எந்த ஒரு திட்டமும் நிறைவேற்ற இயலாத திட்டமாகும். திமுக தலைவர் ஸ்டாலின் இதுவரை என்ன செய்துள்ளார். தேர்தல் சமயத்தில் மட்டும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்பி வாக்குகளை பெற நினைக்கிறார். தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. அந்த கூட்டணியில் உள்ள வைகோ திமுகவில் இருந்தபோது, திமுக குடும்ப ஆட்சி நடத்துகிறது. அது ஒரு கட்சி அல்ல அது ஒரு கம்பெனி என்று சொல்லித்தான் வெளியே சென்றார். எந்த காலத்திலும் தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது என தெரிவித்தவர் வைகோ.

தற்போது அக்கட்சி ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பவாத கூட்டணி தான், தி.மு.க. தலைமையிலான கூட்டணி. தமிழகத்தில் காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒரே கூட்டணியில் போட்டியிடுகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியனை எதிர்த்து போட்டியிடுகிறது. இந்த இரட்டை நிலைப்பாடு உடைய கட்சிகள் எப்படி நிலையான ஆட்சியை தரமுடியும் என்பதை வாக்காள பெருமக்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும்.

அத்திக்கடவு அவினாசி திட்டம் இந்தப் பகுதி மக்களின் ஒரு கனவுத் திட்டம். 60 ஆண்டுகாலமாக விவசாயிகள் எதிர்பார்த்த திட்டம். புரட்சித்தலைவி அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டம். தற்போது அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மாநில அரசின் நிதியாக 1,652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்படுத்துவதன் மூலம் ஈரோடு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள். பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்துறை சென்னிமலை, ஊத்துக்குளி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்கள் 8 பேரூராட்சிகள் 22 ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கிட ரூ.247 கோடி மதிப்பில் கொடிவேரி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு மக்களின் எண்ணங்களுக்கேற்ப திட்டங்களை தீட்டி நிறைவேற்றி வருகிறது. பெருந்துறை பகுதியில் ரூ.54 கோடி மதிப்பில்பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ரூ.18 கோடி மதிப்பில் சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் நடைபெறவுள்ளது. சாலைப் போக்குவரத்து நிறுவன பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.15 கோடி மதிப்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கான சிறப்புப் பிரிவு மற்றும் 200 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணி 10 மாத காலத்தில் முடிக்கப்படும். சிப்காட் சாலை ரூ.28 கோடி மதிப்பில் அகலப்படுத்தப்பட்டுள்ளது. சேலம்-செங்கப்பள்ளி 8 வழிச்சாலை அமைக்கும் போது பல்வேறு இடங்களில் உயர்மட்டப்பாலமும் கட்டப்படும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மரணம் அடைந்தார்கள். அதனால், அவர் மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவருக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என பொதுநல வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் தி.மு.க. வின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உடல் நலிவுற்று கவலைக்கிடமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அந்த சமயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் என்னை சந்தித்து எங்கள் தலைவருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் தரவேண்டும் என கோரினார்கள். நான் அப்பொழுது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. நான் அரசு வழக்கறிஞர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக தெரிவித்தேன். அதன் பிறகு உரிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

தி.மு.க.வினர் இரவோடு இரவாக நீதிமன்றத்தை அணுகி வழக்கை தாக்கல் செய்ததோடு மட்டுமல்லாமல் அம்மா அவர்களுக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என யார் வழக்கு தொடுத்தார்களோ அவர்களாகவே அந்த வழக்கை இரவோடு இரவாக வாபஸ் பெற்றுவிட்டார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், தி.மு.க.வினர் பின்புலமாக இருந்து வழக்கு தொடுத்துள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மனசாட்சி உடையவர்கள். ஆனால் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் உண்மையை மறைத்து நாட்டு மக்களிடத்திலே தவறான தகவலை தெரிவிக்கிறார்.

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மரணம் அடைந்தார். அப்போது அந்த கட்சியினை சார்ந்த தலைவர்கள் முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் காமராஜர் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய கேட்ட போது முதலமைச்சராக இருந்து மரணம் அடைபவர்களுக்கு மட்டும்தான் மெரினாவில் இடம் தர முடியும் என்று தெரிவித்தார். அதேபோன்று புரட்சித்தலைவரின் துணைவியார் ஜானகி அம்மையாருக்கும் அங்கு இடம் அளிக்கவில்லை.

இந்நிலையில், தி.மு.க.வினர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என நீதிமன்றத்தை அணுகினார்கள். அப்போது மெரினாவில் அடக்கம் செய்து கொள்ளலாம் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மனிதாபிமான அடிப்படையில் அரசு மேல்முறையீடு செய்யாமல் நீதிமன்ற தீர்ப்பிற்கு மதிப்பளித்து அவரை அடக்கம் செய்ய அனுமதி அளித்த அரசு இந்த அரசு. தற்போது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மனிதாபிமானம் பற்றி பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்பதை தெரிவிக்க வேண்டும்.

திருப்பூரில் 2வது மற்றும் 3வது குடிநீர் திட்டத்தை நிறைவேற்றிய அரசு அம்மாவின் அரசு. புதிய பேருந்து நிலையம், இரயில்வே மேம்பாலங்கள், ரிங்ரோடு, புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் கட்டியது, நெசவாளர்களுக்கு 500 பசுமை வீடுகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க 7 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ததும் அம்மாவின் அரசு. தொழில் வளத்தை பெருக்கிட தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருவது அரசு அம்மாவின் அரசு. திருப்பூர் 4ஆம் குடிநீர் திட்டம் ரூ.1,400 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். கண்ட, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டிகாக்கப்பட்ட வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.