ஈரோடு

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை காகிதப்பூ – நட்சத்திர பேச்சாளர் பி.சி.அன்பழகன் பிரச்சாரம்…

ஈரோடு:-

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வாசனையில்லாத காகிதப்பூ என்று ஈரோட்டில் நட்சத்திர பேச்சாளர் பி.சி.அன்பழகன் பேசினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி வீரப்பன்சத்திரம் பகுதியில் சட்டமன்ற அவைக்குழு தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.தென்னரசு தலைமையில் வீரப்பன்சத்திரம் பகுதிக் கழக செயலாளர் பி.கேசவமூர்த்தி, மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை இணை செயலாளர் எஸ்.வீரக்குமார் முன்னிலையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக் கழக வேட்பாளர் வெங்கு(எ) ஜி.மணிமாறனை ஆதரித்து மாநில கலைப்பிரிவு இணைச் செயலாளர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் பொதுமக்களிடம் இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் கழகத்தின் நட்சத்திர பேச்சாளர் பி.சி.அன்பழகன் பேசியதாவது:-

விதவை மறுவாழ்வு திட்டத்தில் சேர்ந்து இந்திரா காந்தியை புதுவாழ்வு வாழ சொல்லி வசை பாடிய கருணாநிதி பின்னாளில் மானம் மங்கி “நேரு மகளே வருக.. நிலையான ஆட்சி தருக” என இசைபாடி சரணாகதியடைந்து கூட்டணி வைத்ததை ஸ்டாலினும் வசதியாக மறந்து விட்டு அ.இ.அ.தி.மு.க.- பா.ஜ.க கூட்டணியை பொருந்தா கூட்டணியென பொழிப்போரை எழுதலாமா? 1580பேர் நாடாளுமன்றத்துக்கும், 1277பேர் சட்டமன்றத்திற்கும் தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களை ஸ்டாலின் ஒரே நாளில் கம்யூட்டரை விட விரைவாக நேர்காணல் செய்தாராம். மருமகன் சபரீசன் ஓ.கே.செய்ததை வாசிக்க 5 நிமிடமே அதிகம் தான்.தி.மு.க. தலைவரான ஸ்டாலின் செய்த ஒரே சாதனை. தி.மு.க. உடன் பிறப்புக்களை உதயநிதி ரசிகர் மன்ற உறுப்பினராக்கியது தான்.

1999 களில் கூலி உயர்வு கேட்ட, “மாஞ்சோலை எஸ்டேட்” தொழிலாளர்களையும், 70 களில் விவசாய உரிமைகளை கேட்ட விவசாய போராளிகளை போட்டுத் தள்ளிய, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், “விவசாய கடன் ரத்து” என்பது, வஞ்சகப் புகழ்ச்சியின் வாசனையாகவே தெரிகிறது. எமகண்டத்தை தவிர்த்து, தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டதில் இருந்தே பகுத்தறிவு கட்சியான தி.மு.க. திகிலடித்து கிடப்பது தெரிகிறது.

1974ல் இந்திராகாந்தியோடு. கருணாநிதி வைத்த பேரத்திற்காக இழந்த கச்சத்தீவை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மீட்டுத் தருவார். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை காகிதப்பூ அதில் வாசனையில்லை. சாலை பயணத்திற்கு வேகத்தடையாக இருக்கும் சுங்கவரியை கழகம் ரத்து செய்யும் என்னும் செய்தி. பழாப்பழத்தில் கசியும் தேன் சொட்டைப்போல நினைத்தாலே இனிக்கிறது. பிளஸ்-2, டிப்ளமோ பட்டபடிப்பு முடித்தவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.2000. ஏழைகள் இல்லா மாநிலமாக்க, மாதந்தோறும் அவர்கள் வங்கி கணக்கில் ரூ.1500.

உச்சநீதிமன்ற கிளை தமிழகத்தில் தரமாக அமையும் மாங்கனி தரும் தங்கக்கனியார் எடப்பாடி கே.பழனிசாமி அரசு, பந்தை வீசாமலேயே அரசியல் களத்தில் சிக்சரடித்து விட்டது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை சத்தியமூர்த்தி பவனின் கண்ணியம் காக்க, நள்ளிரவில் வெளியிட்டு இருக்கிறார்கள். பகலில் வெளியிட்டிருந்தால் கதர்சட்டை தியாகிகளின் பாதிபேரின் வேட்டிகளுக்கு ஆபத்து நேர்ந்திருக்கும். கடந்த காலத்தில் கருணாநிதியும், நிகழ் காலத்திலும், எதிர்காலத்திலும் ஸ்டாலின் ஏன், முதல்வராக கனவு நிலையிலேயே கால் கடுக்க காத்திருக்கும் காரணத்தை அறிவாலயத்தின் அறியாமைகளோடு பேசி கண்டுபிடிக்க வேண்டியது தானே.

நம்பிக்கையின் அசலாக அரசியலுக்குள் நுழைந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, “நுண்ணறிவின்” துணைக்கொண்டு, நாடாளுமன்ற தேர்தலில் இரட்டைஇலைக்கு அரசியல் அரங்கில் “தல விருட்ச” அந்தஸ்சை வாங்கித் தருகிறார். ஸ்டாலின் பொதுக்கூட்ட உளறல்கள் உலக சாதனை படைக்கிறது. பிரியங்காவுக்கு இந்திரா போன்ற மூக்காம். ராகுலுக்கு ராஜீவ் போன்ற வாயாம்…இவர்களுக்கு ஓட்டுப்போட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள் என்று காங்கிரஸ்காரர்கள் இதை சாதனைகளாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழச்சி தங்கப்பாண்டியன் ரொம்ப அழகாம். இந்த அழகான பெண்ணை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்க தவறாதீர்கள் என்று வழிந்து கொண்டே, வாக்காளர்களிடம் வாக்களிக்க, வக்காலத்து வாங்குகிறார். ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ உதயநிதி ஸ்டாலின். நாடாளுமன்றத்தை பேஷன் ஷோ நடத்தும் இடமாக பார்க்கிறது தி.மு.க.

இவ்வாறு நட்சத்திர பேச்சாளர் பி.சி.அன்பழகன் பேசினார்.