தற்போதைய செய்திகள்

தி.மு.க. விரைவில் அழிந்து விடும் – அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பரபரப்பு பேச்சு…

ராமநாதபுரம்:-

ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த தி.மு.க. விரைவில் அழிந்து விடும் என்று அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்ததின பொதுக்கூட்டம் மற்றும் நிதியுதவி வழங்கும் விழா கழக இலக்கிய அணி சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை கழக பேச்சாளர் எம்.கே. ஜமால் தலைமை தாங்கினார். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திலகர் முன்னிலை வகித்தார். கழக மருத்துவரணி துணை செயலாளரும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருமான டாக்டர் எம். மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்-என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க நீதிமுறை செய்து மக்களை காப்பாற்றும் மன்னவன் மக்களுக்கு தலைவன் என்று தனியே மதிக்கப்படுவார். அவ்வாறு நீதி நெறியுடன் தனது ஆட்சியை வழிநடத்தி மக்களை காத்து சிறந்த ஆட்சியாளராகவும், மக்கள் தலைவனாகவும், மக்கள் திலகமாகவும் உருவெடுத்து கழகத்தை வழிநடத்தி தந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பொன்மனச்செம்மலின் பிறந்த நாள் விழா தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

தலைவர் காட்டிய வழியில் தனது தொண்டர்களை அரவணைத்து கழகத்தை சீரோடும் சிறப்போடும் வழிநடத்தி தந்து சென்றவர் இதய தெய்வம் அம்மா. இதய தெய்வங்கள் இருவரின் நல்லாசியுடன் எதிரிகளின் பல இன்னல்களையும் சவாலாக ஏற்றுக்கொண்டு மக்களின் சக்தியால் ஆட்சியையும், கட்சியையும் நமது முதல்வரும் மற்றும் துணை முதல்வரும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள்.

நமது ஆட்சியை ஸ்டாலின் குறைகூறி வருகிறார், பழமொழிகளை தலைகீழாகவும், சுதந்திர தின நாள், குடியரசு தின நாளினை தவறாகவும் சொல்லி திரியும் ஸ்டாலின் எங்கள் இயக்கத்தை பற்றியோ எங்கள் முதல்வர் பற்றியோ பேசுவதற்கு எள்ளளவும் தகுதி இல்லை.

உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதும், துணை முதல்வராக இருந்தபோதும் மக்களை சந்தித்து குறைநிறைகளை கேட்டறியாத ஸ்டாலின் தற்போது கிராமசபை கூட்டம் என்ற பெயரில் கேலிக் கூத்து நடத்தி வருகிறார். ஒரு சில கிராமங்களில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறிய ஸ்டாலின் மக்களை கேள்வி கேட்க விடாமல் தான் மட்டுமே பேசி விட்டு கிளம்பி விடுகிறார். கழக ஆட்சியில் நாங்கள் செய்த நலத்திட்டங்களில் சிறிதளவாவது உங்கள் ஆட்சியின் போது மக்களுக்கு செய்தது உண்டா…? தி.மு.க. ஆட்சியின் போது மக்களை சந்தித்தது உண்டா…?

ஸ்டாலின் செய்த சதி திட்டத்தால்தான் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவியும் போனது. தினகரனும், ஸ்டாலினும் செய்த கூட்டுச் சதியால் 18 பெரும் பதவி இழந்து பரிதாப நிலையை அடைந்தனர். கழக அரசு செய்யும் அனைத்து நலத்திட்டங்களின் போது மக்களுக்கு அதை செய்ய விடாமல் தனது வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகளை வைத்து கொண்டு வழக்கு தொடுத்து மக்களுக்கு நலத்திட்டங்களை சேரவிடாமல் அதனை தடுக்கும் வகையில் இழிவான செயலை செய்து வருகிறார்.

கழக அரசிற்கு நல்ல பெயர் வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் செயல்படும் ஸ்டாலின் இனி எந்த காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடியாது, டீக்கடைகளிலும், பிரியாணி கடைகளிலும் சண்டை போடும் நிர்வாகிகளை வைத்துக்கொண்டு தனது கட்சியை வழிநடத்தும் ஸ்டாலினுக்கு மதிகெட்ட யோசனை உள்ளதென்றால்? படித்த இளைஞர்களையும் பணிவான பெண்களையும் துடிப்பு மிக்க தொண்டர்களையும் அறிவில் சிறந்த மூத்த ஆலோசர்களையும் வைத்துக்கொண்டு கழகத்தை வழிநடத்தும் எங்களுக்கு எவ்வளவு யோசனை இருக்கும். மக்களின் ஆதரவால் நாங்கள் எதையும் வென்று காட்டுவோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க டெபாசிட் இழப்பது உறுதி.

அண்ணா தி.மு.க. இயக்கம் என்பது மக்கள் சக்தி பெற்ற இயக்கம். நாங்கள் யாரிடமும் அடிமைப்பட்டு பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. உங்களை போன்று ஈனச்செயல் புரிந்து தமிழர்களுக்கு துரோகம் இழைத்த இயக்கம் எங்கள் இயக்கம் அல்ல. இறந்த ஈழத் தமிழர்களின் ஆன்மா நிச்சயம் உங்களை பழிவாங்கும்.

தி.மு.க. என்ற கட்சி விரைவில் அழியும் நிலையை அடையும். திமுக ஆட்சியின் போது திருநெல்வேலி காவல்துறை அதிகாரி ஒருவரை கொன்றது, ஈழத் தமிழர்களை கொன்று குவித்தது, நில அபகரிப்பு, பாலியல் வன்கொடுமைகள், கட்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது, காவேரி பிரச்சினையில் சரத்துகளை புதுப்பிக்காமல் தமிழர்களை வஞ்சித்தது, வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற இவர்களின் அட்டூழியங்களுக்கு விரைவில் முடிவு கட்டப்படும்.

தொண்டர்களை பற்றி கவலைப்படாமல் தனது சுயநலத்திற்காக கூட்டணி அமைக்கும் சில கட்சித் தலைவர்கள் தான் தி.மு.க.வில் உள்ளனர். கடவுள் மறுப்பு கொள்கை உடையவர் எவரும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியாது. இறை நம்பிக்கை கொண்டவர்கள் தான் இவ்வுலகை ஆள முடியும். இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் நமது இயக்கம் மாபெரும் வெற்றிபெற்று நமது அரசு நிரந்தர அரசாக வலம்வரும்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பேசினார்.

இக்கூட்டத்தில் ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.