தற்போதைய செய்திகள்

தி.மு.க.வுக்கு ஸ்டாலினே முடிவு கட்டி விடுவார் – டாக்டர் ராமதாஸ் பேச்சு…

காஞ்சிபுரம்:-

தி.மு.க.வுக்கு ஸ்டாலினே முடிவு கட்டி விடுவார் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் தொகுதி சார்பில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற கூட்டணி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் வைத்திலிங்கத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலந்தூர் பகுதிக் கழகச் செயலாளர் வி.என்.பி.வெங்கட்ராமன் செய்திருந்தார். கூட்டத்தில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன், ஸ்ரீபெரும்புதூர் கழக சட்டமன்ற உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி, பா.ம.க. துணை செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், கழக சிறுபான்மை நலப்பிரிவு துணை செயலாளர் எம்.எம்.பகீம், மாவட்ட கழக துணை செயலாளர் அம்மன் பி.வைரமுத்து, ஒன்றிய கழகச் செயலாளர் என்.சி.கிருஷ்ணன், கழக நிர்வாகிகள் எம்.கூத்தன், வி.பரணிபிரசாத், எஸ்.வரதராஜன், பி.சிவராஜ், என்.தனசேகர் கே.பிரவின்குமார், ஆர்.ராஜேஷ், ஆலந்தூர் பாலாஜி, எஸ்.எஸ்.கே.ராஜேந்திரன், கோபாலகிருஷ்ணன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

நமது மெகா கூட்டணியை வெற்றி கூட்டணி என்றே கூற வேண்டும். ஒரு நல்ல வேட்பாளரை பா.ம.க. கொடுத்ததற்காக நீங்கள் அவரை உங்கள் வேட்பாளராக பார்க்கிறீர்கள். முதலில் கூட்டணி கட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்மை எதிர்த்து நிற்கும் டி.ஆர்.பாலு தோல்வியை சந்திப்பார் என்பதனை இங்கு கூடியுள்ள மக்கள் வெள்ளம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

முதலமைச்சராக வேண்டும் என்ற கனவில் ஸ்டாலின் மிதக்கிறார். அவரது கனவு வெறும் கானல் நீராகத்தான் போகும். அதோடு கூடிய விரைவில் தி.மு.க.வுக்கு அவரே முடிவு கட்டிவிடுவார். தி.மு.க. ஒரு கார்ப்பரேட் நிறுவனமாகத்தான் செயல்படுகிறது. கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது தாம்பரத்திலிருந்து திருப்போரூர் வரை துணை நகரம் ஒன்று அமைக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். மறுநாள் நடைபெற்ற போராட்டங்களை கண்டு பயந்து உடனே துணை நகரம் திட்டத்தை கைவிட்டார்.

இந்த தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் பா.ஜ.க., பாமக, தேமுதிக, புரட்சி பாரதம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்பட 24 கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி. இந்துக்களை புண்படுத்தும் விதமாக தி.மு.க.வினரும் அதன் கூட்டணியை சேர்ந்தவர்களும் பேசி வருகின்றனர். தி.மு.க.வின் கடைசி முதலமைச்சர் கருணாநிதி தான்.

கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் வைத்திலிங்கத்திற்கு 49 வயதாகிறது. ஆனால் அவரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு 79 வயதாகிறது. 79 வயது நிரம்பியவர் வேண்டுமா? அல்லது 49 வயதுடைய இளைஞர் வேண்டுமா என்பதனை பொதுமக்கள் முடிவு செய்துவிட்டார்கள். நமது வெற்றி உறுதியாகி விட்டது.

இவ்வாறு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.