தற்போதைய செய்திகள்

தி.மு.க.வை கம்யூனிஸ்டு கட்சிகள் பாராட்டி பேசுவது கேலிக்கூத்து – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கடும் தாக்கு…

மதுரை, ஏப். 1-

தி.மு.க.வின் அராஜகத்தை பட்டியலிட்டு நாடகம் போட்ட கம்யூனிஸ்டு கட்சிகள் தற்போது பாராட்டி பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யனை ஆதரித்து மதுரை மாநகர், வடக்கு 1-ம் பகுதியில் உள்ள அந்தனேரி, புதூர் லூர்துநகர், அண்ணா பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். செல்லும் இடங்களில் எல்லாம் வேட்பாளருக்கு பொதுமக்கள் மலர் தூவியும், மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் கழகம் சார்பில் போட்டியிடும் வி.வி.ஆர்.ராஜ்சத்யன் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர். செல்லும் இடமெல்லாம் கழக வேட்பாளருக்கு பொதுமக்கள் வரவேற்பு அளிப்பதை பார்த்தால் இரட்டை இலைக்கு வெற்றி உறுதியாகி விட்டது என தெரிகிறது.

தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க. செய்த அராஜகங்களை தினந்தோறும் பட்டியலிட்டு நாடகம் போட்டனர். ஆனால் தற்போது தி.மு.க.வை கம்யூனிஸ்டு கட்சி பாராட்டி பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது. இதை நான் சொல்ல தேவையில்லை. மக்களுக்கே நன்றாக தெரியும்.

இந்த பகுதி விவசாயம் சார்ந்த பகுதி. முல்லைப் பெரியாறு பாசன நீரால், நீங்கள் விவசாயம் செய்து வருகிறீர்கள். இதே தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி முல்லைப்பெரியாறு பிரச்சினையில் குரல் ஏதாவது கொடுத்தது உண்டா? கேரளாவிற்கு ஆதரவாகத்தான் தி.மு.க. செயல்பட்டது. ஏனென்றால் சன் டி.வி. நிறுவனங்கள் கேரளாவில் உள்ளன. அதை அவர்கள் பாதுகாக்க வேண்டும். இதை விட கொடுமை என்னவென்றால் கேரளாவில் உள்ள சன் குழுமத்தை சேர்ந்த டி.வியில் தமிழத்திற்கு முல்லை பெரியாறு நீரை தரக்கூடாது என்று செய்தி ஒலிபரப்பு செய்தார்கள். இப்படிப்பட்ட துரோகிகளுக்கு மக்களாகிய நீங்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் ரூ.12 லட்சம் கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என்றால் அது தி.மு.க. ஆட்சி தான்.  முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக்காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். இன்றைக்கு இருமுறை 142 அடியாக நாங்கள் உயர்த்தி காட்டியுள்ளோம். தமிழக மக்களுக்காக உழைக்கும் ஒரே அரசு அம்மாவின் அரசு. வறுமை கோட்டிற்கு கீழே உள்ள 60 லட்சம் மக்களுக்கு ரூ.2000 உதவிதிட்டத்தினை முதலமைச்சர் அறிவித்திருந்தார். தேர்தல் முடிந்தபின் நிச்சயம் வழங்கப்படும்.

இன்றைக்கு வலிமையான தேசம், வளமான தமிழகத்தை உருவாக்க மக்களாகிய நீங்கள் விரும்பிய ஒரு மெகா கூட்டணியை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார். இந்த கூட்டணியை நீங்கள் ஆசிர்வாதம் செய்யும் வகையில் உங்கள் பொன்னான வாக்குகளை இரட்டை இலைக்கு அளித்து ஒரு மகத்தான வெற்றியை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார்.