சிறப்பு செய்திகள்

தி.மு.க.வை வேரோடு அகற்றுங்கள்,எதிரிகளை ஓட ஓட விரட்டி அடிப்போம் : முதலமைச்சர் அறைகூவல்…

விழுப்புரம்

நாடாளுமன்ற தேர்தல் மூலம் எதிரிகளை ஓடஓட விரட்டி அடிப்போம், தி.மு.க.வை வேரோடு அகற்றுங்கள் என்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

கழகம்., பா.ம.க. இடையே கூட்டணி ஒப்பந்தம் வெற்றிகரமாக நடந்ததற்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கழக முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்றுமுன்தினம் இரவு விருந்து அளித்தார். இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து காரில் வந்த முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு திண்டிவனம் புறவழிச்சாலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் அ.தி.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக அ.தி.மு.க. தலைமையில் பா.ம.க., பாரதிய ஜனதா கட்சி, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை கூட்டணியில் உள்ளது. இன்னும் பல கட்சிகள் நமது கூட்டணியில் சேர இருக்கின்றன. வளமான தமிழகத்தை உருவாக்கலாம் அம்மா இருந்த காலத்தில், அவர் நிறுத்தியிருந்த வேட்பாளர்களை எப்படி வெற்றிபெறச் செய்தீர்களோ, அதுபோல நாம் நின்றாலும் சரி, நமது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நின்றாலும் சரி, இரவு பகல் பாராமல் உழைத்து அவர்களை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

அவ்வாறு வெற்றி பெறச்செய்தால் தமிழகத்தில் பல திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் இருந்து நிதி பெற வலுவாக இருக்கும். தமிழகம் வளமாக இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றாலும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நிறுத்தப்படுகின்ற வேட்பாளர்கள் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றால் நமது தேவையை பூர்த்தி செய்ய முடியும். தமிழகத்தில் தேவையான திட்டங்களை நாடாளுமன்றத்தில் கேட்டு வளமான தமிழகத்தை உருவாக்கலாம்.

எனவே நமது கட்சி வேட்பாளர், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்ய வேண்டும். இந்த தேர்தல் மூலமாக எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். அம்மா மறைவிற்கு பிறகு நமது இயக்கத்தின் மீது எத்தனை பேர் பழி சுமத்துகிறார்கள் என்று நாம் அனைவருக்கும் தெரியும். அம்மாவிற்கு நினைவு மண்டபம் கட்ட தொடங்கிய போது எத்தனை வழக்குகள் தொடர்ந்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும்.

வஞ்சக குணம் படைத்த, தீய சக்தி கொண்ட தி.மு.க.வை வேரோடு அகற்ற வேண்டும். அம்மா மறைவிற்கு பிறகு நடக்கின்ற முதல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இது. எதிரிகளை ஓட, ஓட விரட்டி அடிக்கின்ற தேர்தலாக அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அண்ணா தி.மு.க. கூட்டணி பலமான கூட்டணி என்பதை நிரூபிக்க வேண்டும்

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.