சிறப்பு செய்திகள்

தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையம் 24-ந்தேதி திறப்பு – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார்

சென்னை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 24-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசிபெற்ற இந்த அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும், முக்கிய பண்டிகைகளான தீபாவளி மற்றும் பொங்கல் ஆகிய விழா காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்புடன், நல்ல முறையில் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பிட ஏதுவாக, போக்குவரத்துத்துறையின் சார்பில் போதிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, கூடுதலான பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அந்த வகையில், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துத்துறையின் சார்பில், மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் தலைமையிலும் தீபாவளி பேருந்துகள் இயக்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆண்டும் கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழக கே.கே. நகர் பேருந்து நிலையம் ஆகிய 5 இடங்களிலிருந்தும் வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 24/10/2019 முதல் 26/10/2019 வரை மேற்கூறிய இடங்களிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,225 பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளாக 4,265 பேருந்துகள் என மூன்று நாட்களும் சேர்த்து ஓட்டு மொத்தமாக, சென்னையிலிருந்து 10,940 பேருந்துகளும் இயக்கப்படும். பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட மூன்று நாட்களுக்கு 8,310 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

மேலும், மேற்கண்ட நாட்களில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து சேலம், மதுரை, திருச்சி, தேனி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு முறையே 1165 மற்றும் 920 பேருந்துகள் இயக்கப்படும். மேற்கண்ட நாட்களில் பெங்களூரிலிருந்து சேலம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை, கரூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கு 251 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள முன்பதிவு வாயிலாக நாளது வரையில், சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு 43,635 பயணிகளும், பிற ஊர்களிலிருந்து முக்கிய ஊர்களுக்கு 23,138 பயணிகளும் ஆகமொத்தம், 66,773 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் 3.26 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வரும் 24.10.2019 அன்று கோயம்பேட்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு மையங்களை தொடங்கி வைக்கிறார்.

கடந்த ஆண்டுகளை போல 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் சிறப்பு பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் இணையதளங்களின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கணிணினி மூலம் உடனடி தள முன் பதிவு செய்யும் வகையில், பொது மக்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு முன்பதிவு கவுண்டர்களும், MEPZ (தாம்பரம் சானிடோரியத்தில்)-2 சிறப்பு முன்பதிவு கவுண்டர்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு கவுண்டரும் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் ஒரு சிறப்பு முன்பதிவு ஆக மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் அமைக்கப்படும். இந்த சிறப்பு முன்பதிவு கவுண்டர்கள் வரும் 24/10/2019 முதல் செயல்படும். அரசு நிர்ணயித்துள்ள கட்டணத் தொகை மட்டுமே வசூலிக்கப்படும்.

கடந்த ஆண்டு நவம்பர்-2018 தீபாவளி மற்றும் பொங்கல்-2019 ஆகிய பண்டிகை நாட்களில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், பயணிகளின் எளிதான பயணத்திற்கு ஏதுவாகவும், பேருந்துகள் புறப்படும் இடங்கள் மாற்றியமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டமைக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டும் வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்யும் வகையில், 24.10.2019, 25.10.2019 மற்றும் 26.10.2019 ஆகிய நாட்களில் பயணிகள் ஏறும் இடங்கள் பின்வருமாறு மாற்றியமைத்து செயல்படுத்தப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் விவரம் பின்வருமாறு:-

வெளியூர் பேருந்து நிலையங்கள்

1. ஆந்திரா செல்லும் பேருந்துகள்

செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையம்.

2. இ.சி.ஆர். (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக இயக்கப்படும் பேருந்துகள்

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் கே.கே. நகர் மா.ந,போ.கழக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

3. அ) திண்டிவனம் வழியாக கும்பகோணம்,தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் (MEPZ உட்பட) தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

ஆ) திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் மதுராந்தகம், போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்திலிருந்து புறப்படும்.

4. வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர் காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், சித்தூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

மேற்கண்ட நான்கு இடங்களிலிருந்து புறப்படும் பேருந்துகளுக்கு 24.10.2019, 25.10.2019 மற்றும் 26.10.2019 தேதிகளில் கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வகையில், ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் 24.10.2019 முதல் 26.10.2019 வரை மாற்றியமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். மேலும், இத்தடப் பகுதிகளில் பயணம் செய்யவுள்ள பிற பயணிகளும் மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகள் புறப்படும் இடங்களுக்குச் சென்று பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து மேற்கண்ட நான்கு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5. கோயம்பேடு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள்

இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர்)

வழித்தட மாற்றங்கள்

1. கோயம்பேடு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகள் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம் பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிசுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2. இதனால் முன்பதிவின் போது தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் குறிப்பாக, முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் ஊரப்பாக்கம் (கிளாம்பாக்கம்) தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்றடைந்து அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்திற்கு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கார் மற்றும் இதர வாகனங்கள்

24.10.2019 முதல் 26.10.2019 வரை கார் மற்றும் இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து, திருக்கழுக்குன்றம் – செங்கல்பட்டு அல்லது ஸ்ரீபெரும்புதூர் – செங்கல்பட்டு வழியாக சென்றால், போக்குவரத்து நெரிசல் இன்றி பயணம் செய்யலாம். பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சென்னையிலிருந்து அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்குச் செல்ல தினசரி இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன் கூடுதலாக, வரும் 24.10.2019 அன்று 992 சிறப்பு பேருந்துகளும், 25.10.2019 அன்று 1,763 சிறப்பு பேருந்துகளும், 26.10.2019 அன்று 1,510 சிறப்பு பேருந்துகளும் என 24.10.2019 முதல் 26.10.2019 வரை மொத்தம் 4,265 சிறப்பு பேருந்துகளும், ஒட்டு மொத்தமாக மூன்று நாட்களிலும் சேர்த்து சென்னையிலிருந்து 10,940 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் குறித்து புகார் தெரிவிப்பதற்கும் 9445014450 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு செயல்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.