தற்போதைய செய்திகள்

தீயசக்தி தி.மு.க.வை தோற்கடிப்போம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆவேசம்…

தருமபுரி:-

தி.மு.க எனும் தீயசக்தியை தோற்கடித்து நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெறுவதே நமது தலையாய கடமை என்று அமைச்சர் கே.பி.அன்பழகன்கூறினார்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியின் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிகளின் கழக வேட்பாளர்கள் வே.சம்பத்குமார், ஏ.கோவிந்தசாமி ஆகியோருக்கு சமூக வலைதளங்கள் மூலம் சிறப்பான முறையில் செயல்பட்டு ஆதரவை பெருக்குவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் தருமபுரி மாவட்ட கழக அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர், கிரிநாத், துணை செயலாளர் சுதாகர், பொருளாளர் கோவிந்தசாமி, காரிமங்கலம் பாரதி, ரஞ்சித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் அணில் பிரகாஷ் அனைவரையும் வரவேற்று பேசினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன், கழக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், தொழில்நுட்ப பிரிவு கொங்கு மண்டல பொறுப்பாளர் த.லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

இந்த நாடாளுமன்ற தேர்தலில் தகவல் நுட்ப பிரிவு அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் என அனைத்திலும் தி.மு.க.வுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதை போல சின்ன விசயங்களை விட்டுவிடக் கூடாது. நாடாளுமன்ற தேர்தலில் நாமும், கூட்டணி வேட்பாளர் வாங்கிய வாக்குகள் 8 லட்சத்திற்கு மேலான வாக்குகளாகும். அம்மாவின் அரசு பல நலத்திட்டங்களை நமது மாவட்டத்தில் செய்திருக்கிறது. குறிப்பாக உயர்கல்வியில் சேர முடியாமல் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் தவித்து வந்த நிலைமாறி 98.4 சதவீத மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

பல்லாயிரக்கணக்கான பட்டதாரி பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கி இருக்கிறோம். பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் வழங்கி வருகின்றோம். கிராமங்கள் தோறும் அங்கன்வாடி மையங்கள், புதிய நியாயவிலைக்கடைகள், தார்சாலைகள், குடிநீர் மேல்நிலை தொட்டிகள், உயர்மட்ட மேம்பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள், புதிய நீர்ப்பாசன திட்டங்கள், புதிய கலைக்கல்லூரிகள், சட்டக்கல்லூரி, பலவகை தொழில்நுட்ப கல்லூரி, புதிய புதிய பாடப்பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் விடப்பட்டுள்ளன.

இந்த சாதனை திட்டங்களை கழக தொழில்நுட்ப பிரிவு எடுத்து சென்று மக்களிடம், இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.திமுக எனும் தீயசக்திகளை தேர்தலில் தோற்கடித்து வெற்றிபெறுவதே நமது தலையாய கடமை. கூட்டணி வேட்பாளர்களும் வெற்றிபெற பாடுபட வேண்டும். வெற்றி பெறுவதே நமது இலக்காகும். ஆகவே கழக தொழில்நுட்ப பிரிவு தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு வெற்றிபெற பாடுபட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதியில் கழக தொழில்நுட்ப பிரிவு கோவிந்தசாமி நன்றி கூறினார்.