தற்போதைய செய்திகள்

தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்குவோம் – ராமநாதபுரத்தில் அமைச்சர் எம்.மணிகண்டன் பிரச்சாரம்…

ராமநாதபுரம்:-

நாட்டின் நலன் கருதியே கழகத்தின் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்குவோம் என்று ராமநாதபுரத்தில் அமைச்சர் எம்.மணிகண்டன் பிரச்சாரம் செய்தார்.

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியின் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து மாவட்டம் முழுவதும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பிரச்சாரம் செய்து வாக்குசேகரித்து வருகிறார். காலையில் பிரச்சாரங்களை தொடங்கும் அமைச்சர் வீதிவீதியாக மக்களை சந்தித்து கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தும், நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்களிடம் வாக்குசேகரித்தார்.

இந்த பிரச்சாரத்தின் போது அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் தெரிவித்ததாவது:-

புரட்சித்தலைவி அம்மாவின் ஆசிபெற்ற வேட்பாளரும், பிரதமர் நரேந்திரமோடியின் ஆதரவு பெற்ற வேட்பாளருமான நயினார் நாகேந்திரனை நமது மாவட்ட மக்கள் இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். இந்த தேர்தலில் நமக்கும் திமுக கூட்டணிக்கும் மட்டும் தான் போட்டி. மற்ற கட்சிகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டாம். காசி பகுதியில் நரேந்திரனும், ராமேஸ்வரம் பகுதியில் நாகேந்திரனும் போட்டியிடுகின்றனர்.

இறைவன் நல்லவர்களோடு தான் உடனிருப்பார். தி.மு.க.வில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லக்கூட திராணி இல்லாத கட்சி. மத்தியில் உள்ள காங்கிரஸ் குடும்ப கட்சியும், மாநிலத்தில் உள்ள தி.மு.க. குடும்ப கட்சியும் நாட்டை கொள்ளையடிக்க கூட்டணி வைத்துள்ளனர். ஆனால் நமது கூட்டணியில் தொண்டர்கள் முதல்வராகவும், பிரதமராகவும் வரமுடியும். நாங்கள் மக்களுக்கு செய்த நன்மைகளை எடுத்துரைத்து வாக்குகள் கேட்கிறோம்.

திமுக தலைவர் ஸ்டாலின் நம்மை குறைசொல்லி வாக்கு கேட்கிறார். அவர் மக்களுக்கு ஏதேனும் நன்மைகள் செய்தால் அல்லவா மக்களை சந்தித்து வாக்குகள் கேட்க முடியும்.? செல்லும் இடமெல்லாம் தி.மு.க கூட்டணி நிர்வாகிகளை மக்கள் புறமுதுகிட செய்கிறார்கள். மதம் சார்ந்த நிர்வாகிகளை கூட்டணியில் வைத்து கொண்டு மதசார்பற்ற கூட்டணி என்று சொல்கின்றனர். உண்மையில் மதசார்பற்ற கூட்டணியை அமைத்திருப்பது கழகம் தான்.

நாட்டின் நலன் கருதி தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் பிரதமர் மோடி ஆட்சி மீண்டும் வேண்டும். நம்மோடு நட்பாக இருக்கும் மோடி ஆட்சிக்கு வந்தால் நமது மாவட்டத்திற்கு கேட்கும் அனைத்து திட்டங்களும் வந்து சேரும். மருத்துவக்கல்லூரியும் நமது மாவட்டத்தில் அமையும் அம்மா ஆட்சியில் தான் மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருக்கிறார்கள். எனவே கழக கூட்டணியின் பா.ஜ.க வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்து ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மத்திய அமைச்சரை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.மணிகண்டன் பேசினார்.