சிறப்பு செய்திகள்

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…

காஷ்மீரில் தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த இரு தமிழக வீரர்களின் குடும்பங்களை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணை பிறப்பித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இத்தாக்குதலில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஜி.சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சி.சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது.

இந்தியத் திருநாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், தங்களது இன்னுயிரை தியாகம் செய்த, மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் 15.2.2019 அன்று உத்தரவிட்டேன்.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் ஜி.சுப்ரமணியன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தையும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூவையும், மாவட்ட ஆட்சித் தலைவர், மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் சிவசந்திரன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசு கொறடா ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் உத்தரவிட்டுள்ளேன். மறைந்த சுப்ரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.