சிறப்பு செய்திகள்

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த இரு தமிழக வீரர்கள் மனைவியர்க்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்…

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  தலைமைச் செயலகத்தில், ஜம்முகாஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் காவல் படைவீரர் ஜி.சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சி.சிவசந்திரனின் மனைவி காந்திமதிக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் காவல்படையினர் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் ஜி.சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சி.சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய திருநாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், தமது இன்னுயிரை தியாகம் செய்த, மத்திய பாதுகாப்புப் படைவீரர்கள் ஜி.சுப்ரமணியன் மற்றும் சி.சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா இருபது லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 15.2.2019 அன்று உத்தரவிட்டு அத்தொகை உடனடியாக வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த மத்திய பாதுகாப்புப் படைவீரர்கள் ஜி.சுப்ரமணியன் மற்றும் சி.சிவசந்திரன் ஆகியோரின் குடும்பத்திலுள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 16.2.2019 அன்று உத்தரவிட்டார். தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில் உயிரிழந்த ஜி.சுப்ரமணியனின் மனைவி கிருஷ்ணவேணிக்கும், சி.சிவசந்திரனின் மனைவி காந்திமதிக்கும் கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, அரசு தலைமைக் கொறடா எஸ்.இராஜேந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், பொதுத்துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) முனைவர் பி.செந்தில் குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப்நந்தூரி, அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.விஜயலட்சுமி, பொதுத்துறை துணைச் செயலாளர் (மரபு) டி.மோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.