கடலூர்

தீவைத்து படகுகள் எரிப்பு – மீனவர் குடும்பத்திற்கு கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ ஆறுதல்…

கடலூர்:-

சிதம்பரம் அருகே தீவைத்து எரிக்கப்பட்டதால் படகை இழந்து பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ ஆறுதல் கூறியதோடு, நிவாரணம் வழங்கினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த எம்.ஜி.ஆர் திட்டு மீனவர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு சொந்தமான 4 படகுகளில் சுருக்கு வலைகளை பயன்படுத்தி மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகிறார் என்று கருதி மீனவர்களில் ஒரு பிரிவினர் கடந்த 29ஆம் தேதி அன்று இவரது 4 படகினையும் தீயிட்டுக் கொளுத்தினர். இச்சம்பவத்தால் இவரது நான்கு படகுகளும் முற்றிலும் சேதமடைந்தது.

பாதிக்கப்பட்ட குமார் வீட்டுக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகள் வழங்கினார். மேலும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான நிவாரண உதவிகள் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர் திட்டு பகுதியில் இருந்து முடசல் ஓடை வரை படகில் சென்று எரிந்த நிலையில் சேதமடைந்து கிடந்த படகுகளை பார்வையிட்டார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், ஒன்றிய கழக செயலாளர் அசோகன், நகர செயலாளர் விஜயன், மாவட்ட துணைச் செயலாளர் தேன்மொழி காத்தவராயசாமி, சந்திர்ராமஜெயம், நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, தன.ஜெயராமன் தமிழரசன், தமிழ்மணி, மணிமாறன், சுந்தரம் அன்பு ஜீவா, ராமசந்திரன், பிரகாஷ், தமிழன்பன், கருணாநிதி, கல்யாணசுந்தரம், ரமேஷ், சக்திவேல், திருவேங்கடம், சுந்தரம், சரவணன் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.