தற்போதைய செய்திகள்

துரோகிகளை டெபாசிட் இழக்கச் செய்வோம் – அமைச்சர் கே.பி.அன்பழகன் சபதம்…

தருமபுரி:-

துரோகிகள், எதிரிகளை டெபாசிட் இழக்க வைத்து கழக கூட்டணியை மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் பிரச்சாரம் செய்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் சம்பத்குமார், தருமபுரி நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியின் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை ஆதரித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் மொரப்பூர் ஒன்றியத்தில் உள்ள ஈச்சம் பாடி ஊராட்சி சொர்ணம் பட்டி, சின்னஈச்சம்பாடி, மல்லாபுரம், அக்ரஹாரம், பல்லம்பட்டி, ஜெபிநகர், மஞ்சமேடு, பெரமாண்டப்பட்டி, மற்றும் நல்லை, சாமாண்டஹள்ளி, கொசப்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழங்கிய திட்டங்களில் இலவசம் என்று சொல்லக் கூடாது என்பதற்காக விலையில்லா பொருட்கள் என்ற சொல்லை சொல்ல வேண்டும் என அம்மா கூறினார். அம்மா கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றிய காரணத்தினால் தான் அம்மா அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் ஆதரவை கொடுத்தார்கள். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை அம்மா அவர்கள் உச்சரித்தார். அம்மா ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி 20 கிலோ என்பதை வழங்கினார். இதுபோல எண்ணற்ற திட்டங்களை அம்மா வழங்கினார்.

அம்மாவால் கொண்டு வரப்பட்ட அனைத்து திட்டங்களும் தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் நூறு யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. தர்மபுரிக்கு சட்டக்கல்லூரி பொறியியல் கல்லூரி 6 அரசு கல்லூரிகளை கொடுத்தது அம்மாவின் அரசு. இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள 41 பல்கலைகழக உறுப்புக்கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றிய பெருமை அம்மாவின் வழியிலேயே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சரையே சாரும். தமிழ்நாட்டு மக்களுக்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

பணிக்குச் செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை கழக அரசு செயல்படுத்தி வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த கூடிய அளவிலேயே சிப்காட் தொழிற்சாலை விரைவில் அமைய இருக்கிறது. நம்மிடம் இருந்து பிரிந்து சென்ற துரோகிகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தேர்தலில் கழக வேட்பாளர் சம்பத்குமாருக்கு இரட்டை இலை சின்னத்திலும், நாடாளுமன்ற கழக கூட்டணியின் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு மாம்பழம் சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும்.எதிரிகளை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி. அன்பழகன் பேசினார்.

இந்த வாக்குசேகரிப்பின் போது மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத்தலைவர் பசுபதி, மாவட்ட கழக துணை செயலாளர் செண்பகம் சந்தோஷம், மொரப்பூர் முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் மதிவாணன், ஒன்றிய எம்.ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிவன், நிர்வாகிகள் தனபால், செல்வம், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.