தூத்துக்குடி

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி பெறவே முடியாது – எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேச்சு…

தூத்துக்குடி:-

தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. வெற்றி பெற முடியாது என்று தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. கூறினார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கழக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது அதன்படி உடன்குடியில் ஒன்றிய செயலாளர் மகாராஜன், நகர செயலாளர் ஜெயகண்ணன் ஆகியோர் தலைமையில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

இந்தியாவே வியக்கும் அளவுக்கு தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வாரி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் நல்லாட்சியை சிறப்பாக நடைபெற்று வருகிறது.அதேபோல் உலக நாடுகள் வியந்து பாராட்டும் வகையில் இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய செய்து இந்திய திருநாட்டை ஒரு பெருமை மிக்க நாடாக உயர்த்திய நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. கழக கூட்டணியில் உள்ளது. நமது கூட்டணி வெற்றி கூட்டணி. நாடாளுமன்ற தேர்தலில், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் கழக கூட்டணி வெற்றி வாகை சூடப்போகிறது.

இதற்காக கழகத்தினர் கழக அரசின் சாதனைகளையும், மத்திய அரசின் சாதனைகளையும் மக்களை வீடு வீடாக சந்தித்து எடுத்துரைக்க வேண்டும். அதேபோல் வெளியூர் சென்றுள்ள வாக்காளர்களை கணக்கெடுத்து அவர்களிடமும் வாக்கு சேகரிக்க வேண்டும். தூத்துக்குடி தொகுதி கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் யாரை நிறுத்துகிறார்களோ அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க இரவு பகல் பாராது தேர்தல் பணியாற்ற வேண்டும். தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற முடியாது.

இவ்வாறு தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில கழக மீனவர் அணி துணைத்தலைவர் எரோமிஸ், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் ஆறுமுகநயினார், விவசாய சங்கத்தலைவர் குணசேகரன், பாலஜெயம், தூத்துக்குடி கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் சுதாகர், முன்னாள் யூனியன் தலைவர் மல்லிகா, தலைமை கழக பேச்சாளர் பொன் ஸ்ரீராம், சாம்ராஜ். லட்சுமிபுரம் ஊராட்சி செயலாளர் அமிர்தா மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.