தூத்துக்குடி

தூத்துக்குடி குடிநீர் பிரச்சினைக்கு கழக ஆட்சியில் மட்டுமே தீர்வு – தி.மு.க., எம்.எல்.ஏ., கீதாஜீவனுக்கு சி.த.செல்லப்பாண்டியன் பதிலடி…

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கிராமசபை கூட்டம் நடத்தி எத்தனை பேரின் பிரச்சனைகளை தீர்த்து வைத்து இருக்கிறார்கள் என்பதை மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக தெரிவிக்க முடியுமா என்று தி.மு.க.வினருக்கு மாவட்ட கழக செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் கேள்வி விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் மேற்கு பகுதி செயலாளர் ஏ.முருகன், கழக அமைப்பு செயலாளரும், நெல்லை ஆவின் சேர்மனுமான சின்னத்துரை ஆகியோர் முன்னிலையில் கழக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட கழக செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்து பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு மக்களை ஏமாற்றவே தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி, ஸ்டாலின் மகன் உதயநிதி ஆகியோரை அழைத்து வந்து கிராம சபை நடத்துகிறோம் என்று தொடர்ந்து மக்களை திசை திருப்பி வருகிறார்கள். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தூத்துக்குடி கீதாஜீவன், திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் அரசியல் விளம்பரம் தேடும் வகையில் கிராமசபை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக தூத்துக்குடி மாநகருக்கு தி.மு.க ஆட்சியில் தான் குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்தோம் என்று பொய் சொல்லி வருகிறார்கள். தூத்துக்குடி நகருக்கு அன்றைய நகராட்சி தலைவராக இருந்த குரூஸ்பர்ணாந்தின் தீவிர முயற்சியால் வல்லநாட்டில் இருந்து முதல் குடிநீர் பைப் லைன் திட்டம் அமைத்து தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அதன்பின் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உத்தரவுப்படி 1982-ம் ஆண்டு 2-வது பைப் லைன் திட்டம் மூலம் கூடுதல் குடிநீர் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா உத்தரவுப்படி 1993-ம் ஆண்டு 3-வது பைப்லைன் திட்டம் மூலம் குடிநீர் நம் நகருக்கு கிடைத்தது. அதன்பின் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக குடிதண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வந்தனர். இதையடுத்து 2011-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தூத்துக்குடி மக்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிதண்ணீர் கிடைக்க 4-வது பைப்லைன் திட்டம் தருவோம் என்று புரட்சித்தலைவி அம்மா தெரிவித்தார்.

அதுபோல் கழகம் வெற்றிபெற்றவுடன் ரூ.282 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேலமருதூர் அணையில் இருந்து 4- வது பைப்லைன் திட்டம் மூலம் குடிதண்ணீர் கொண்டு வரப்பட்டது. மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து வரும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைப்படி கிடைத்தது தான் 4- வது பைப் லைன் திட்டம். அதன்மூலம் தூத்துக்குடி மாநகரில் குடிநீர் போதும்போதும் என்ற அளவுக்கு தற்போது கிடைத்து வருகிறது. இப்படி தூத்துக்குடி மாநகருக்கு நிரந்தரமாக குடிதண்ணீர் தந்து சாதனை படைத்து வருவது அம்மாவின் அரசு. தற்போது புரட்சித்தலைவி அம்மா வழியில் தமிழக மக்களுக்கு இந்தியாவே வியக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாட்சி தந்து வருகிறார்கள்.

தி.மு.க.வினருக்கு தற்போது எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்று தெரியாமல் மாவட்ட ஆட்சித்தலைவர் விடுமுறையில் சென்று இருந்தால் உயர் அரசு அதிகாரிகள் கிராமசபை கூட்டம் நடத்தி மக்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பார்கள். இது நடைமுறையில் உள்ளது. இது மக்கள் அனைவருக்கும் தெரியும். தற்போது தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாட்டில் கனிமொழி எம்.பி., நடிகர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மூலம் தி.மு.க.வினர் தூத்துக்குடியில் நடத்திய கிராமசபை கூட்டத்தில் எத்தனை பேரின் பிரச்சினைகளை உடனே தீர்த்து வைத்துள்ளீர்கள் என்று வெளிப்படையாக தெரிவிக்க முடியுமா? தமிழக மக்கள் என்றும் சிறப்புடன் வாழ்ந்திட புரட்சித்தலைவி அம்மா வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான நல்லாட்சிக்கு மேலும் கூடுதல் வலிமை சேர்க்கும் விதத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றியை தரவேன்டும்.

தேர்தல் நேரத்தில் செய்ய முடியாத பல்வேறு பொய் வாக்குறுதிகளை மக்களிடையே அள்ளி விசிட தி.மு.க, தினகரன் அணி மற்றும் புதிய கட்சி ஆரம்பித்து முதல்வர் கனவில் மிதக்கும் நடிகர்கள் உள்பட அனைவரும் ஏமாற்றிட வருவார்கள். மக்களே உஷாராக இருக்க வேண்டும். தமிழகத்தையும், தமிழக மக்களையும் சிறப்புடன் வாழவைக்க கூடிய ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். மக்கள் வாக்களிக்கக்கூடிய ஒரே வெற்றி சின்னம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் தந்த இரட்டைஇலை சின்னம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் பேசினார்.

இந்த தெருமுனை பிரச்சார கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் தீக்கனல் லட்சுமணன், கிழக்கு பகுதி செயலாளர் சேவியர், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் டாக்டர் ராஜா, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ராஜசேகரன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் சி.த.செ.ஜெபசிங், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருத்தாய், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஜீவா பாண்டியன், தூத்துக்குடி கூட்டுறவு வங்கி தலைவர் சி.த.சு.ஞானராஜ், நியூட்டன் மாவட்ட பிரதிநிதி சேவியர்ராஜ், தூத்துக்குடி வீட்டுவசதி சங்க தலைவர் பெருமாள், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், மேற்கு பகுதி அவைத்தலைவர் சந்தானம், மேற்கு பகுதி துணை செயலாளர் கணேசன், தூத்துக்குடி போக்குவரத்து மண்டல இணை செயலாளர் சங்கர், வட்ட செயலாளர்கள் ஜெயகணேஷ், முருகேசன், தமிழரசன், பரமசிவன், பெருமாள், வட்ட பிரதிநிதிகள் பிரபாகரன், ஜெயக்குமார், வசந்தா, மாடசாமி, மாடன், ராஜேஸ்வரி, டெரன்ஸ், சண்முக கனி, ராஜேந்திரன், பேச்சியப்பன், அந்தோணி, டாஸ்மாக் மாவட்ட செயலாளர் விஜயகுமார், 50-வது வார்டு அமல்ராஜ், வழக்கறிஞர் சீனிவாசன், ஜெபராஜ், சாம் கவுதம், கோர்ட் காசி, பிளம்பர் இசக்கிமுத்து, ஆபீஸ் பொறுப்பாளர் கனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.