திருநெல்வேலி

தென்காசி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் – மண்டல சிறப்பு அலுவலர் அறிவுறுத்தல்

திருநெல்வேலி

தென்காசி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று மண்டல சிறப்பு அலுவலர் மு.கருணாகரன் அறிவுறுத்தி உள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல சிறப்பு அலுவலர் முனைவர். மு. கருணாகரன் பேசியதாவது:-

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான 2ம் கட்ட நிவாரண பொருட்கள், நிதியுதவியை உடனடியாக வழங்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் வீடுகள், நிறுவனங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.

நோய்த்தொற்று கண்காணிப்பு சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் உணவின் தரத்தை இணை இயக்குநர் தொடர்ந்து சோதனையிட்டு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஊரடங்கு தளர்வுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மரகதநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் குணசேகரன், இணை இயக்குநர் ராஜா, வட்டாட்சியர் அழகப்ப ராஜா, புளியங்குடி நகராட்சி ஆணையாளர் குமார் சிங் உள்பட பலர் பங்கேற்றனர்.