தற்போதைய செய்திகள்

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.11.60 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடக்கம் – அமைச்சர் கே.பி. அன்பழகன் தகவல்

தருமபுரி

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 50 கிராமங்கள் பயனைடையும் வகையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.11.60 கோடியில் உயர் மட்ட மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே நவலை பெரமாண்டபட்டி – கே. அக்ரஹாரம் இடையே தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. இதனால் ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள பெரமாண்டப்பட்டி, எட்டிப்பட்டி, அண்ணாமலைபட்டி, நவலை சின்னா கவுண்டம்பட்டி, போளையம் பள்ளி, பொம்பட்டி, மாரப்ப நாயக்கன்பட்டி, கெட்டுப் பட்டி, ஆற்றின் மறுபுறம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.அக்ரஹாரம், மல்லமாபுரம், மஞ்சமேடு எம்.வெளாம்பட்டி, திருவனப்பட்டி, ஆனங்கூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் மழை காலங்களிலும், தென்பெண்ணையாற்றில் தண்ணீர் வருகிற போதும் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பேருந்துகள், சுகர் மில்லுக்கு கரும்பு ஏற்றிச் செல்லும் லாரிகள், பொதுமக்கள் என கடும் அவதிடைந்து வந்தனர்.

இதனையடுத்து இந்த ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என இரு மாவட்ட மக்கள், விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் இடைத்தேர்தல் போது உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் இதுகுறித்து இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அமைச்சர் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

அதன் பேரில் பிரச்சாரத்தின் போதே பொது மக்களின் நீண்ட கால கோரிக்கையான தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் விரைவில் கட்டப்படும் என வாக்குறுதி அளித்தார். அதற்காக ரூபாய் 11 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து நவலை – பெரமாண்டப்பட்டி சாலை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டம் சார்பில் நவலை பெரமாண்ட பட்டி சாலை -கே.அக்ரஹாரம் வரையுள்ள தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்ததாவது:-

தருமபுரி மாவட்டம், நெடுஞ்சாலைத்துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டம் சார்பில் நவலை – பெரமாண்டப்பட்டி சாலை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.11.60 கோடி மதிப்பீட்டில் கி.மீ 4/6-ல் 166.40 மீ நீளத்தில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்ட பாலம், 12 மீட்டர் அகலம், ஓடுதள அகலம் 7.50 மீ – 8.10 மீ, 8 கண்கள், நடைபாதைகளை கொண்டதாகும். இப்பணியானது விரைந்து முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதனால் 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அக் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.