தமிழகம்

தெலுங்கு- கன்னட மக்களின் வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் – முதலமைச்சர் யுகாதி தின வாழ்த்து…

சென்னை:-

தெலுங்கு, கன்னட மக்களின் வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்துள்ள யுகாதி தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள “யுகாதி தின” வாழ்த்துச் செய்தி வருமாறு:-

தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த “யுகாதி” புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பன்மொழி பேசும் மக்களும், பாரினில் ஒற்றுமையாக வாழலாம் என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில், தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள், பேசும் மொழி, பாரம்பரியம் மற்றும் பண்பாட்டில் வேறுபட்டு இருந்தாலும், உணர்வால் ஒன்றுபட்டு, காலங்காலமாய் தமிழ்நாட்டு மக்களோடு நல்லுறவைப் பேணி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உறுதுணையாக வாழ்ந்து வருவது பெருமைக்குரிய ஒன்றாகும்.

மலரும் இப்புத்தாண்டு, உங்கள் அனைவரது வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பானிசாமி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.