கோவை

தேக்கம்பட்டி நலவாழ்வு முகாமில் மவுத் ஆர்கன் வாசித்து ரஷ்ய கலைஞர்களை உற்சாகப்படுத்திய ரெட்டை திருப்பதி யானை

மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கான சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 15-ந்தேதி தொடங்கிய இந்த முகாமில் 28 யானைகள் பங்கேற்றுள்ளன. யானைகள் சிறப்பு முகாமை பார்வையிட நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இந் நிலையில் ரஷ்யா நாட்டு கலாச்சார நடனக் குழுவினர் யானைகள் நலவாழ்வு முகாமை காண வருகை தந்தனர். இந்தியா- ரஷ்யா கலாச்சார நட்புறவு கழகம் சார்பில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்த இக்குழுவினர் மேட்டுப்பாளையம் வருகை தந்து யானைகள் நலவாழ்வு முகாமை கண்டு ரசித்தனர். முகாமிற்கு வந்த ரஷ்ய கலைஞர்களை முகாம் நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.

மிகவும் குளிர் பிரதேசமான ரஷ்யாவில் யானைகள் என்பதே கிடையாது. இதுவரை பாட புத்தகங்களிலும், புகைப்படங்களில் மட்டுமே கண்ட யானையை ரஷ்யா குழுவினர் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் குளிப்பது, உணவு உண்ணுதல், அசைபோடுதல் மற்றும் அவைகள் செய்யும் குறும்புதனத்தை பார்த்து மெய்மறந்து பார்த்து ரசித்தனர். மேலும் யானைகளை குளிப்பாட்டும் இடங்களையும் பார்வையிட்ட அக்குழு பாகன்களுடன் இணைந்து யானைகளை குளிக்க வைத்தனர்.

இதனையடுத்து முகாமில் கட்டி வைக்கப்பட்டிருந்த ரெட்டை திருப்பதியானை லட்சுமி ரஷ்ய நாட்டு குழுவினரை வரவேற்கும் விதமாக மவுத் ஆர்கன் வாசித்து அவர்களை உற்சாகப்படுத்தியது. யானையையே கண்டிராத ரஷ்யா குழு யானையின் இந்த திறமையை பாராட்டியதுடன் அந்த யானையுடன் நின்று தனித்தனியே மற்றும் குழுவாக புகைப்படமும் எடுத்து கொண்டனர்.