தற்போதைய செய்திகள்

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவிப்பு – அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்…

சென்னை

சென்னை செனாய் நகர் அம்மா அரங்கத்தில் நேற்று மாநில அளவிலான குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் ஆணையர் முனைவர் இரா.நந்த கோபால், அனைவரையும் வரவேற்று பேசினார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, அரசு முதன்மைச் செயலாளர் சுனீல் பாலீவால் தலைமை வகித்தார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவர் பா.வளர்மதி முன்னிலை வகித்தார்.

தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர். நிலோபர் கபீல் குழந்தை தொழிலாளர் முறை அகற்றுதலில் சிறப்பாக பணியாற்றிய கள அலுவலர்களுக்கு விருதுகள் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கி பேசியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 ஆம் நாள் “குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்“ உலக முழுவதும் அனுசரிக்கப்படுகின்றது. தமிழகத்தில் நாம் இந்த தினத்தில் வெகு சிறப்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றோம். சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகிய இடங்களில் குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக ‘உறுதிமொழி’ எடுக்கப்படுகின்றது.

தமிழகத்தில் குழந்தைகளின் உரிமைகளைக் காத்திடவும், குழந்தைத் தொழிலாளர் முறையை அறவே அகற்றிடவும் தமிழக முதல்வர் தலைமையிலான அரசு முனைப்புடன் செயலாற்றி தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே.தமிழகத்தில் குழந்தைகளை வேலைக்கு அமர்த்தினால் அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். கடைகள், உணவு நிறுவனங்கள், திடீர் ஆய்வுகள் நடத்தப்பட்டு, குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவோர் மீது தொழிலாளர் துறை மூலம் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் மத்திய அரசுடன் இணைந்து சிறப்புப் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தற்பொழுது 295 சிறப்புப் பயிற்சி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சுமார் 6162 குழந்தைகள் படித்து வருகின்றனர். 2018-19ம் ஆண்டில், சுமார் 2463 குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கீழ் மூலம் சிறப்புப் பயிற்சி மையங்களில் படித்த சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் முறையான பள்ளிகளில் இந்நாள்வரை சேர்க்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இதில் பலர் சாதனை மாணவர்களாகவும், பலர் கலை மற்றும் பொறியியல் கல்லுhரிகளிலும் படித்தும், ஆசிரியர் பணியிலும், காவல்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிலும் நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தை வளமாக்கிக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களில், தற்போது நடைபெற்ற 10 ஆம் வகுப்புத் தேர்வில் 94ரூ சதவீதமும், 12ம் வகுப்புத் தேர்வில் 97ரூ சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆம் வகுப்புத் தேர்வில், தமிழகத்தில் 8 மாணவர்கள் 400-க்கு மேல் மதிப்பெண்களும், 12 ஆம் வகுப்புத் தேர்வில், தமிழகத்தில் 5 மாணவர்கள் 500-க்கு மேல் மதிப்பெண்களும், பெற்றுள்ளது பாராட்டத்தக்கது.

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு தமிழக அரசு இலவச சீருடை, இலவச பேருந்து சலுகை, வாரம் 5 நாள் முட்டையுடன் கூடிய இலவச சத்துணவு, விடுதி வசதி, போன்ற சலுகைகள் வழங்கி வழங்கப்படுகிறது.

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட சிறப்புப் பயிற்சி மையத்தில் பயின்று தற்பொழுது மேற்படிப்பு பயிலும் முன்னாள் குழந்தைத் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் மாதம் ரூ.500/- வீதம் அவர்கள் கல்வி காலம் முழுமைக்கும் வழங்கப்படுகிறது. இந்தப் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கனவே பெறும் மாத கௌரவ ஊதியத்துடன் தலா ரூ.500/- கூடுதலாக மாதந்தோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழக அரசின் மூலம் 2018-19 ஆம் ஆண்டில் 713 மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.42,78,000/- ஊக்கத்தொகையும், 1008 சிறப்பு பயிற்சி மைய பயிற்றுநர்களுக்கு ரூ.60,48,000/- உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திட குறும்படம், விளம்பரங்கள், சுவரொட்டிகள், பொதுக்கூட்டங்கள், மனித சங்கிலி பேரணிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை. ஒவ்வொரு குழந்தைக்கும் கல்விக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தர வேண்டியது பெற்றோரின் முதல் கடமை. பல காரணங்களால் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. இந்த நிலையை மாற்றுவது நமது பொறுப்பும் மற்றும் கடமையாகும். எனவே, பெற்றோருக்கும், சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நமது முக்கிய கடமையாகும்.

சாதாரண மனிதனின் ஏழ்மை நிலையை போக்கி வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திட இந்த அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றது.அவ்வழியில், தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்கள் காரணமாக குழந்தைத் தொழிலாளர் மற்றும் அபாயகரமான தொழில்களில் வளரிளம் பருவ தொழிலாளர்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கிட, நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படுவோம்.