தற்போதைய செய்திகள்

தேனி மாவட்ட வன பகுதிக்குள் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தகவல்

தேனி

தேனி மாவட்ட வன பகுதிக்குள் புலிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சுருளி அருவியில் நடைபெற்ற சுருளி சாரல் விழா தொடக்க விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:- 

தேனி மாவட்டத்தின் மொத்தம் உள்ள 3242.30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வனப்பகுதி மட்டும் 1090.84 சதுர கிலோ மீட்டர் உள்ளது. இது மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 34 சதவீதம் ஆகும். தேசிய வன கொள்கையின்படி நாட்டின் வனப்பரப்பினை 33 சதவீதத்திற்கு உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், தற்போது தேனி மாவட்ட வனப்பகுதியின் பரப்பு 34 சதவீதம் அதாவது தேசிய இலக்கை விட கூடுதலாக வனப்பரப்பு உள்ளது.

தேனி மாவட்ட வனப்பகுதிகள் தேனி வனக்கோட்டம், மேகமலை வன உயிரினக்கோட்டம், கொடைக்கானல் வனக்கோட்டத்தின் ஒரு பகுதி என மூன்று வனக்கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கோட்டங்கள் அம்மா அவர்களின் காலத்தில் தான் அதாவது, 2012-ம் ஆண்டு தேனி வனக்கோட்டம் மற்றும் மேகமலை வன உயிரின கோட்டம் என இரு கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் வன பகுதியிலிருந்து உற்பத்தியாகும் வைகை ஆறு, சுருளியாறு, கொட்டக்குடி ஆறு ஆகிய நதிகள் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.

இதுதவிர இம்மாவட்ட வனப்பகுதிக்குள் சர்வதேச அளவில் அழிந்து வருகின்ற புலி, சிறுத்தை, யானை, வரையாடு மற்றும் சிங்கவால் குரங்கு போன்ற பல்வேறு வகையான வன உயிரினங்கள் வன பகுதியில் உள்ளது. மேலும் தாவர இனங்கள் மற்றும் அரியவகை மூலிகைகளின் விளைநிலமாக இவ்வனப்பகுதி திகழ்கிறது.

வனப்பகுதி மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்கும் பொருட்டு, மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூலம் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கடந்த ஆண்டு நடைபெற்ற வன உயிரின கணக்கெடுப்பின் அடிப்படையில் பார்க்கும் போது தேனி மாவட்ட வனப்பகுதிக்குள் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டில் அதிகளவு மழை பொழிந்து வைகை, சுருளியாறு மற்றும் கொட்டக்குடி ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து செல்வதையும், நீர் நிலைகள் யாவும் அம்மா அவர்களின் ஆட்சியில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள குளங்கள் மற்றும் கண்மாய்களில் நீர் நிரம்பி விவசாயம் செழித்து உள்ளது. தேனி மாவட்ட வனப்பகுதிக்குள் காணப்படும் வன உயிரினங்களின் வளர்ச்சியானது வனப்பாதுகாப்புச் சட்டத்தின் மணிமகுடமாக அமைந்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீ.சினிவாசன் பேசினார்.