தற்போதைய செய்திகள்

தேர்தல் அறிக்கையை தி.மு.க. திருத்தியது கேலிக்கூத்து – டாக்டர் ராமதாஸ் சாடல்…

காஞ்சிபுரம்

தேர்தல் அறிக்கையை தி.மு.க. திருத்தியது கேலிக்கூத்து என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் பல்லாவரம் நகரத்தில் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர் மா.வைத்திலிங்கம் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா. பென்ஜமின் தலைமையில் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்றது. பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் மா.வைத்திலிங்கத்தை அறிமுகம் செய்து வைத்துச் சிறப்புரையாற்றினார்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் வி.அலெக்சாண்டர் எம்.எல்.ஏ., நாடாளுமன்ற உறுப்பினர் கே.என். இராமச்சந்திரன், குன்றத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் மதனந்தபுரம் கே.பழனி எம்.எல்.ஏ., முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ப.தன்சிங், அனகை முருகேசன், திருகச்சூர் ஆறுமுகம், மற்றும் வேதாசுப்பிரமணியன், இ.மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க வேட்பாளர் மா.வைத்திலிங்கத்தை அறிமுகம் செய்து வைத்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

உச்சநீதிமன்ற கிளை சென்னையில் கொண்டு வரப்பட வேண்டும் என கழக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இது பலதரப்பட மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய ஒன்று. பெண் குழந்தைகளை பாதுகாக்க ஒரு அருமையான ஆணையை தமிழக முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை எங்கு நடந்தாலும் அதை உடனடியாக விசாரித்துத் தண்டனை பெற்றுக்கொடுக்கும் அருமையான திட்டம்.

ஒரு கட்சி தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்வது என்பது கேலிக் கூத்தாகும். கடந்த தேர்தல் அறிக்கையில் திமுக எங்களை 60 சதவீதம் காப்பி அடித்தது. இந்த முறை 90 சதவீதம்காப்பியடித்தது. இது தான் திமுகவின் பாணி.தேர்தல் அறிக்கையை கூட ஒழுங்காக தயாரிக்க முடியாத கட்சி திமுக. கழக தேர்தல் திட்டமிடலை கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் பின்பற்ற வேண்டும். 35 பேருக்கு ஒருவர் என திட்டமிட்டு வைத்துள்ளனர். இதனால் தான் கடந்த முறை 37 தொகுதியில் வெற்றி பெற்றனர்.

இவ்வாறு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.