தமிழகம்

தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி…

வேலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வீடு மற்றும் இல்லங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.23 கோடி பற்றிய விபரங்கள் மற்றும் வழக்குப்பதிவு குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். 

சென்னை

வேலூரில் பணம் பறிமுதல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வரும் 18ம்தேதி நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758. 5.99 கோடி. இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923. பெண் வாக்காளர்கள் 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 45 பேர், மாற்றுபாலினத்தவர் 5,790 பேர் உள்ளனர். அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டையை இதற்கு முன்னர் வழங்கியிருந்தோம்.

தற்போது வந்துள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் வாக்காளர் அட்டை அச்சடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளோம். கடந்த இரண்டு மாதங்களில் 14 லட்சத்து 10 ஆயிரத்து 745 அட்டைகளை அனுப்பியுள்ளோம். இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து அட்டைகளும் விநியோகம் செய்யப்பட்டு விடும். தற்போது வாக்குச்சீட்டு விநியோகத்தையும் ஆரம்பித்துள்ளோம். இந்த வாக்குச் சீட்டுகளை வைத்து வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்று சரிபாத்துக் கொள்ளலாம்.

இந்த வாக்காளர் சீட்டை மட்டும் வைத்து வாக்களிக்க முடியாது. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 ஆவணங்களின் அடிப்படையில் வாக்களிக்கலாம். நேற்று வரை (10ம்தேதி வரை) 19 லட்சத்து 17 ஆயிரத்து 471 சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இந்த முறை 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நமது மாநிலத்தில் 7 அகில இந்தியக் கட்சிகள் 7 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 3 அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சிகள் உள்ளது.

மே 19ல் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்தி வருகிறோம். இதுவரை 127.66 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு படை மூலம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியாக வருமான வரித்துறை மூலமும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமானவரித்துறை இதுவரை 37.78 கோடி பறிமுதல் செய்துள்ளார்கள். 10ம்தேதி 3,48 கோடி பணம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளது. தகுந்த ஆவணங்களை அளித்ததின் அடிப்படையில் இதுவரை 62.24கோடி பணம் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. தங்கம் 989 கிலோ 594 கிலோ வெள்ளி. மேலும் பரிசுப் பொருட்கள் பிடிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு28 கோடி.

தேர்தல் விதிமுறையை மீறியது தொடர்பாக இதுவரை 4185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 93 வழக்குகள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் போதுமான அளவுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளது. ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 15 வாக்காளர் பெயர் மற்றும் ஒரு நோட்டா இடம் பெற்றிருக்கும். மொத்தம் 16 பெயர்கள் மட்டுமே இருக்கும். இதுபோல 16 மேலே பெயர்கள் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 30 பெயர்களுக்கு மேலே இருந்தால் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.

1 லட்சத்து 50 ஆயிரம் 302 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தற்போது உள்ளன. கண்ட்ரோல் யூனிட் 89 ஆயிரத்து , 160 இருக்கிறது. 14 ஆயிரத்து 653 யாருக்கு வாக்களித்தோம் என்ற இயந்திரம் உள்ளது. இதுபோன்ற அனைத்தும் போதுமான அளவுக்கு நம்மிடம் உள்ளது. மொத்தம் 67,720 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு ஒருஇடத்தில் பெண் வாக்காளர்களுக்குத் தனி வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வாய்ப்பு இருந்தால் கூடுதலாகவும் அமைப்பார்கள்.

7,718 பதட்டம் மற்றும் மிக பதட்டமான வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 67 ஆயிரம் வாக்குச்சாவடி மையங்களில் 30 ஆயிரம் வாக்குசாவடி மையங்களில் வெப் கேமரா பொருத்தப்பட்டு அதனை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிப்பாளர்கள். தேர்தல் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி நடத்திய போது அவர்களுக்கு உரிய தபால் வாக்குகளைப் பதிவு செய்தார்கள். தொடர்ந்து வரும் 13ம்தேதி மேலும் ஒரு பயிற்சி அளிக்கப்படும்.

அங்கும் அவர்கள் தபால் வாக்குப பதிவு செய்து அளிக்கலாம். இதுவரை அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்குத் தபால் வாக்களிக்க 4 லட்சத்து 8 ஆயிரத்து 973 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. காவல்துறையில் 87 ஆயிரத்து 869 தபால் வாக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. மற்ற பணியாளர்களுக்கு 11 ஆயிரத்து 53 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. சி விஜில் ஆப் மூலம் 2085 புகார்கள் வந்துள்ளன. 899 புகார்களுக்கு சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் பார்த்து நடவடிக்கை எடுத்தார்கள். 40 புகார்கள் தற்போது நிலுவையில் உள்ளது. 1950 என்ற இலவச எண்ணில் தேர்தல் வாக்குப்பதிவு, வாக்காளர் பெயர் குறித்த விபரங்கள். வாக்குச்சாவடி மையம் குறித்த விபரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கேட்டுப் பெறும் வசதியைத் தமிழகம் முழுவதும் செய்துள்ளோம்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்திற்கு சென்னையில் இதற்குத் தனி மையம் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மட்டும் 1 லட்சத்து 48 ஆயிரத்து 788 தகவல் கேட்பு கால்கள் வந்தது. இதில் 1 லட்சத்து 46 ஆயிரத்து 1 கால்களை நாங்கள் பெற்று நடவடிக்கை எடுத்துள்ளோம். வாக்குப்பதிவு நாள் மற்றும் அதற்கு முன் ஒரு நாள் பத்திரிக்கையில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் விளம்பரம் தர சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள தேர்தல் குழுவிடம் அனுமதி பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கு என்று தற்போது தனியாக காவல்துறைத் தலைவரைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. இதுவழக்கமான ஒன்று தான். அதிகாரிகள் மாற்றம் மற்றும் நியமித்தல் போன்றவற்றை ஆணையம் தான் முடிவு செய்யும். வாக்குச்சாவடி மையங்களில் அலைபேசி கொண்டு செல்லக்கூடாது. வேலூரில் கைப்பற்றப் பணம் தொடர்பான அறிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரியிடமிருந்து பெற்றுள்ளோம். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையும் அறிக்கை அளித்துள்ளது. இவை அனைத்தையும் தொகுத்து இன்று ( நேற்று) இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புகிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 சதவீதம் அளவிற்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்துள்ளோம். எனவே பழுது ஏற்பட்டால் உடனடியாக மாற்றும் வசதி நம்மிடம் உள்ளது. 30 நிமிடங்களுக்கும் பழுது ஏற்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் புதிய இயந்திரத்தை வைக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பு படை தனது பணியைச் செய்யும். சி.விஜில் ஆப் மற்றும் தேர்தல் தொடர்பாகப் புகார்கள் எந்த நேரத்தில் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்.

பணம் பட்டுவாடா உள்ளிட்ட பிரச்சனைகளைச் சரி செய்ய பல்வேறு நடவடிக்கையை நாங்கள் தொடர்ந்து எடுத்து வருகிறோம். தேர்தல் விதிமுறையை யார் மீறினாலும் அவர்கள்மீது கண்டிப்பாக ஆணையம் நடவடிக்கை எடுக்கும். பணப் பட்டுவாடாவை தடுக்க ஆணையம் எடுத்த நடவடிக்கையின் காரணமாகத் தான் அதிகளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் அளிப்பது தொடர்பான படம், காணொளி ஆகியவற்றை சி.விஜில் ஆப்பில் அனுப்பினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.மேலும்1950 எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். தபால் வாக்கு விஷயத்தில் எங்கும் எந்த தவறும் நடக்கவில்லை.

இவ்வாறு தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.