சிறப்பு செய்திகள்

தேர்தல் பணிகளை கண்காணிக்க பார்வையாளர்கள் விரைவில் வருகை – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி…

சென்னை:-

தேர்தல் செலவின பார்வையாளர்கள் விரைவில் தமிழகம் வர இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததிலிருந்து தேர்தல் ஆணையம் கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையால் இதுவரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.3.39,95 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுகட்டடங்களில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் 64,385 இடங்களில் அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  தனியார் கட்டடங்களில் 24,082 விளம்பரங்கள் அழிக்கப்பட்டு இது குறித்து 875 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பண பரிவர்த்தனையை கண்காணிக்க வருமான வரித்துறையின் உதவி கோரப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடக்கும் பண பரிவர்த்தனை குறித்து கண்காணிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் பண பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறையிடம் புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4256669 -யை பயன்படுத்தலாம். 044 -2826 2357 என்ற தொலைநகலி எண்ணையும், 94454 67707 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் பொதுமக்கள் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். மேலும் itcountrol.chn.gov.in என்ற மின்னஞ்சலிலும் புகார்களை தெரிவிக்கலாம்.

பணம் எடுத்து செல்லும் விவகாரம் தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. ரூ.10 லட்சம் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றால் பணம் பறிமுதல் செய்யப்படாது. ஆனால் அதற்குரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும். இல்லை என்றால் இதற்கென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுவுக்கு இந்த தகவல் அளிக்கப்பட்டு அங்கு ஆவணங்களைக் காண்பித்து 24 மணி நேரத்தில் பணத்தை பெற்று செல்லலாம். இந்த குழுவில் மூன்று அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். ரூ10 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்து சென்றால் இது குறித்து உடனடியாக வருமானவரித்துறைக்கு தகவல் அளிக்கப்படும்.

வேட்பாளர்கள் ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கு அதிகமான மதிப்பை கொண்ட பரிசுப் பொருட்கள் எடுத்து சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும். நட்சத்திர பேச்சாளர்கள் ரூ.1 லட்சம் வரை அவர்களின் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லாம். தேர்தல் செலவின பார்வையாளர்கள் விரைவில் வருகிறார்கள். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கு ஒரு காணொளி குழு நியமிக்கப்படுவார்கள். தேவைப்பட்டால் இவை அதிகரிக்க வழி வகை செய்யப்படும். மாநிலம் முழுவதும் இதுவரை 7360 பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. மிக மிகப் பதற்றமானவை என்று 6460 வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

மதுரையில் தேர்தலை தள்ளிவைப்பது தொடர்பான விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது குறித்து பெறப்படும் தகவல்கள் அனைத்து இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் இவை நீதிமன்றத்தில் அளிக்கப்படும். கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் போது தேர்தல் நடத்தப்படுவதால் அதை தள்ளி வைக்க வேண்டும் என்று மூன்று மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் நாடு முழுவதும் நடைபெறுவதால் தள்ளி வைப்பது கடினம். இருப்பினும் புகார்கள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் இது பற்றி உரிய முடிவு எடுப்பார்கள். பொது இடங்களில் விளம்பங்கள் செய்யத்தடை செய்யப்பட்டுள்ளது. தனியார் இடங்களில் உரிய அனுமதி பெற்று விளம்பரம் செய்து கொள்ளலாம்.

நகராட்சி பகுதிகளில் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை. மீறி விளம்பரம் செய்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அழிப்பதற்கு உண்டான செலவுகள் வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்படும். பண பரிவர்த்தனை மற்றும் பணப்பட்டுவாடா குறித்து சி விசில் என்ற ஆப்பிற்கு படத்துடன் அல்லது காணொளியுடன் தகவல் அனுப்பினால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.