சிறப்பு செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவம் 15-ந்தேதி தமிழகம் வருகை – தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு பேட்டி…

நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக 10 கம்பெனிகள் கொண்ட துணை ராணுவம் வரும் 15-ந்தேதி தமிழகம் வருகிறது. இத்தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இதுவரை ரூபாய் 57, லட்சத்து 12,400 வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் திருவாரூரில் மட்டும் 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் குறித்து இதற்கு என அமைக்கப்பட்ட குழு ஆய்வு செய்யும். தமிழகம் முழுவதும் பொது இடங்களில் ( அரசு இடங்களையும் சேர்த்து ) 11 ஆயிரத்து 375 சுவரொட்டிகள், பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. இதற்கான செலவுகள் சம்பந்தப்பட்ட கட்சிகளின் கணக்கில் சேர்க்கப்படும்.

இதுபோல தனியார் இடங்களில் சுமார் 3088 இடங்களில் சுவரொட்டிகள் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கான செலவுகளும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் கணக்கில் சேர்க்கப்படும். திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் தொடர்பான வழக்குப்பதிவு செய்த சரவணன் தனது வழக்கை வாபஸ் பெற்றுள்ளதாக செய்தி வந்துள்ளது. எனக்கு இது தொடர்பாக நீதிமன்றத்திலிருந்து எந்த உத்தரவும் வரவில்லை .மூன்று தொகுதி தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு வாபஸ் பெறப்பட்டாலும் இது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு அளித்தால் மட்டுமே ஆணையம் முடிவு எடுக்க முடியும்.

இந்த மூன்று தொகுதி நிலவரம் குறித்துத் தேர்தல் ஆணையம் தகவல் கேட்டுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழாவின் போது தேர்தல் நடத்துவது குறித்து நீதிமன்றத்தில் 14-ந்தேதி (நாளை) தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான முழுவிபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அனைத்து ஆவணங்களையும் மாவட்ட தேர்தல் அதிகாரி நீதிமன்றத்தில் அளிப்பார். தமிழக அரசு செயல்படுத்தியுள்ள 2 ஆயிரம் வழங்கும் சிறப்புத் திட்டம் குறித்து இங்கு நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் எந்த கட்சியினரும் பேசவில்லை.

அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் துப்பாக்கிகளைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பிற்காக வரும் 15-ந்தேதி 10 கம்பெனி துணை ராணுவம் தமிழகம் வருகிறது.இவர்கள் எந்த எந்த இடத்திற்கு அனுப்பப்படுவார்கள் என்பதை காவல்துறை முடிவு செய்யும். மேலும் மதுரையைப் போன்று திருவண்ணாமலையிலும் தேர்தல் தேதியின் போது பவுர்ணமி விழா கொண்டாடப்படுவதால் அதுகுறித்து புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. திமுக இந்தியத் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளது குறித்து என்னிடம் ( மாநில தேர்தல் ) விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கான விளக்கத்தைத் தேர்தல் ஆணையத்திற்கு அளிப்பேன்.

உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி குற்ற வழக்குடைய வேட்பாளர்கள், தங்கள் குற்ற விவரங்களை மாவட்ட அளவில்
பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும். மூன்றுமுறை விளம்பரம் செய்யவேண்டும். அரசியல் கட்சிகள் அவர்களின் கட்சியைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்களை மொத்தமாகச் சேர்ந்து விளம்பரம் அளிக்க வேண்டும். இது போன்று மூன்று முறை விளம்பரம் அளிக்க வேண்டும். இதற்கான செலவுகள் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியின் தேர்தல் செலவுகள் கணக்கில் சேர்க்கப்படும்.

இவ்வாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு தெரிவித்தார்.