தற்போதைய செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவ படையினர் கோயம்புத்தூர் வருகை…

கோவை:-

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினர் ரயில் மூலம் கோவை வந்தனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனிடையே, வேட்பு மனு தாக்கல் வரும் 19-ந் தேதி தொடங்கி, 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

தமிழக தேர்தல் பாதுகாப்புக்கு 10 கம்பெனி துணை ராணுவ படையினர் சென்னை வந்துள்ளனர். இவர்கள்  பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் இரு கம்பெனி துணை ராணுவ படையினர் ரயில் மூலம் நேற்று கோவை வந்தனர். மொத்தம் 168 பேர் வந்து உள்ளனர். அதில் ஒரு கம்பெனி போலீசார் கோவைக்கும் மற்றொரு கம்பெனி போலீசார் மதுரையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர்.

இவர்கள் நிலை கண்காணிப்புக் குழுக்களுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து மார்ச் 30-ந்தேதி தேதிக்குப் பிறகு கூடுதலாக துணை ராணுவப் படையினர் கோவை வருவார்கள் என காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.